பந்தலூர் அருகே, சேரம்பாடி வனப்பகுதியில் இறந்த கிடந்த குட்டி யானை
பந்தலூர் அருகே சேரம்பாடி வனப்பகுதியில் குட்டி யானை இறந்து கிடக்கிறது. இந்த யானையின் உடல் அருகே வனத்துறையினர் உள்பட யாரையும் அருகில் விடாமல் தாய் யானை விரட்டியடித்தது.
பந்தலூர்,
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள சேரம்பாடி நாயக்கன்சோலை வனப்பகுதியில் புலி, சிறுத்தை, காட்டு யானைகள், மான்கள், கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்தநிலையில் யானைகளில் பிளிறல் சத்தம் அதிகமாக கேட்டது. இதனால் வனப்பகுதியை யொட்டி உள்ள தேயிலை தோட்டங்களில் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பீதி அடைந்தார்கள். மேலும் அவர்கள் இதுபற்றி கூடலூர் வனத்துறையினருக்கு நேற்று மாலை தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் கூடலூர் உதவி கோட்ட வன அலுவலர் விஜயன், சேரம்பாடி வனச்சரகர் (பொறுப்பு) கணேசன் மற்றும் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவஇடத்திற்கு சென்றனர். அப்போது வனப்பகுதியில் தொடர்ந்து யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.
இதைத்தொடர்ந்து வனத்துறையினர் டெலஸ்கோப் மூலம் யானைகளின் பிளிறல் சத்தம் கேட்ட பகுதியில் பார்த்தனர். அப்போது அங்கு ஒரு குட்டி யானை இறந்து கிடந்தது தெரியவந்தது. மேலும் அந்த யானையின் உடலை சுற்றி ஏராளமான யானைகள் நின்றன. இதையொட்டி வனத்துறையினர் அங்கு சென்றனர். பின்னர் யானைகளை விரட்டுவதற்காக பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. ஆனால் யானைகள் அங்கிருந்து நகராமல் அப்படியே நின்றன.
அப்போது திடீரென ஒரு பெண் யானை மட்டுமே ஆக்ரோஷமாக அங்கிருந்து வனத்துறையிரை நோக்கி ஓடி வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் அங்கிருந்து தலைதெறிக்க ஓடினார்கள். மேலும் அந்த பெண் யானையின் கண்களில் இருந்து கண்ணீர் வந்ததற்கான அறிகுறிகள் இருந்தன. இதனால் அந்த யானை, இறந்து போன குட்டியின் தாய் யானை என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:- தேயிலை தொழிலாளர்கள் கொடுத்த தகவலின் பேரில் சேரம்பாடி நாயக்கன்சோலை வனப்பகுதிக்கு சென்று பார்த்தோம். அப்போது அங்கு ஒரு குட்டி யானை இறந்து கிடந்தது. இதனால் அந்த யானையின் அருகில் செல்ல முயன்றோம். அப்போது குட்டி யானையின் தாய் யானை எங்களை அருகில் விடாமல் விரட்டியதோடு, பாசப்போராட்டம் நடத்தி வருகிறது. மேலும் யானைகள் கூட்டம் அதிகஅளவில் உள்ளதாலும் எங்களால் அருகில் செல்ல முடியவில்லை.
அதனால் நாளை (இன்று) வியாழக்கிழமை தாய் யானை மற்றும் யானை கூட்டம் அங்கிருந்து சென்றுவிட்டதா என்று பார்ப்போம். இல்லையெனில் காட்டு யானைகளை விரட்டிவிட்டு, கால்நடை டாக்டர் மூலம் வனப்பகுதியில் இறந்துகிடக்கும் குட்டி யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும். அதன்பின்புதான் குட்டியானை இறந்தது குறித்த முழுத்தகவலும் தெரியவரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.