20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு பணியாளர் சங்கத்தினர் உண்ணாவிரதம்
20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பணியாளர் சங்கத்தினர் கடலூரில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்,
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையாக அனைத்து படிகள் மற்றும் போனஸ் வழங்க வேண்டும். ஓய்வூதியம் வழங்கப்படாத அனைத்து நிலை அரசு பணியாளர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
டாஸ்மாக் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பணி நியமனம், பணியிட மாறுதல், பதவி உயர்வு ஆகியவற்றில் உள்ள குறைபாடுகள் மற்றும் முறைகேடுகள் களையப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் கே.சிவக்குமார் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
இதில் மாநில அமைப்பு செயலாளர் சீனுவாசன், பொதுச்செயலாளர் குப்புசாமி, செயலாளர் வெ.சிவக்குமார், மாநில செயலாளர் ஞானஜோதி, மாநில தலைவர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். முடிவில் மாவட்ட செயலாளர் விவேகானந்தன் நன்றி கூறினார்.