பெரும்பாறை அருகே, யானை தாக்கி பெண் பலி - 2 பேர் படுகாயம்

பெரும்பாறை அருகே யானை தாக்கி பெண் பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-11-27 22:30 GMT
பெரும்பாறை,

திண்டுக்கல் மாவட்டத்தில் கன்னிவாடி, ஒட்டன்சத்திரம், வத்தலக்குண்டு வனச்சரகத்துக்கு உட்பட்ட இடங்களில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக பழனி மலைப்பகுதிகளான ஆயக்குடி, வரதமாநதி, சத்திரப்பட்டி, கோம்பைப்பட்டி, பரப்பலாறு அணை, சிறுவாட்டுக்காடு, பண்ணைப்பட்டி ஆகிய இடங்களில் யானைகள் அதிகளவில் நடமாடுகின்றன.

இதேபோல் கொடைக்கானல் கீழ்மலைப்பகுதிகளான தாண்டிக்குடி, பெரும்பாறை, மங்களம்கொம்பு, குப்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி, பெரியூர், நடுபட்டி, நல்லூர்காடு, கவுச்சிகொம்பு, சேம்படிஊத்து, ஆடலூர் ஆகிய இடங்களில் வழித்தடத்தை ஏற்படுத்தி யானைகள் வந்து செல்கின்றன. இந்த யானைகளால் பயிர்கள் அழிவதோடு விவசாயிகள், மலைக்கிராம மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

வனப்பகுதியில் சுற்றித்திரியும் யானைகள் குடியிருப்பு மற்றும் விளைநிலங்களுக்குள் புகாமல் தடுப்பது வனத்துறையினருக்கு குதிரைக்கொம்பாகவே உள்ளது. இந்தநிலையில் நேற்று பெரும்பாறை அருகே, பெரியூர் ஊராட்சிக்கு உட்பட்ட மன்றகால்வாய் பகுதியில் உள்ள தோட்டத்தில் தங்கவேல் (வயது 50) அவருடைய மனைவி ஜெயலட்சுமி (40), சரஸ்வதி (35) ஆகியோர் காபி பழம் பறித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த காட்டு யானை ஒன்று அவர்கள் 3 பேரையும் விரட்டியது. இதனையடுத்து அவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ஆனால் அவர்களை பின்தொடர்ந்து சென்ற யானை, 3 பேரையும் தாக்கியது. இதில் தங்கவேல், சரஸ்வதி, ஜெயலட்சுமி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் சிகிச்சை பலனின்றி ஜெயலட்சுமி பரிதாபமாக இறந்தார். காயம் அடைந்த 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே திண்டுக்கல் மாவட்டத்தில் யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதற்காக ஒரு வனவர், ஒரு வனக்காப்பாளர் மற்றும் 20 பேரை கொண்ட வன உயிரின மீட்பு படை அமைக்க வேண்டும். இவர்களுக்கு தனியாக வாகனம் வழங்க வேண்டும்.

டார்ச்லைட், வயர்லெஸ், ஜி.பி.எஸ். கருவிகள் மற்றும் யானை எந்த பகுதியில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளும் வரைபடம் வழங்க வேண்டும். பழனி மற்றும் கொடைக்கானல் வனப்பகுதிகளில் சுற்றித்திரியும் யானைகளை சிறுவாட்டுக்காடு, பரப்பலாறு அணை வழியாக அமராவதி வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்