சிதம்பரத்தில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து: நடவடிக்கை எடுக்க சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு
சிதம்பரத்தில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட மாட்டு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சப்-கலெக்டர் அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர்கள் மனு அளித்தனர்.
சிதம்பரம்,
சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று அனைத்து ஆட்டோ ஓட்டுனர்-உரிமையாளர் சங்கம் சார்பில் ஆட்டோ டிரைவர் முத்து தலைமையில் டிரைவர்கள் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமதாசை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- சிதம்பரத்தில் உள்ள நான்கு வீதிகள், ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் சாலை உள்பட பல்வேறு சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்மாபேட்டை சாலையில் திடீரென மாடு ஒன்று குறுக்கே வந்ததால் அங்கு விபத்து ஏற்பட்டது. இதில் ஆட்டோ டிரைவர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
எனவே சாலையில் மாடுகள் சுற்றித்திரிவதை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சாலையில் மாடுகளை மேய்ச்சலுக்காக விட்டுள்ள சம்பந்தப்பட்ட மாட்டின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர். தொடர்ந்து நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா, சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனையும் சந்தித்து ஆட்டோ டிரைவர்கள் மனு கொடுத்தனர்.