7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் - 150 பேர் கைது

நாகர்கோவிலில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 150 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-11-26 23:00 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 26-ந் தேதி (நேற்று) கலெக்டர் அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதாவது 37 ஆண்டுகளாக ஒரே துறையில் பணிபுரிந்து வரும் சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்குதல் அவசியம். வயது முதிர்வு காரணமாக ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்களுக்கு பணிக்கொடையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். அரசு மற்றும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது அவசியம். 25 குழந்தைகளுக்கும் குறைவாக உள்ள பள்ளி சத்துணவு மையங்களை மூட கூடாது. அரசே சமையல் எரிவாயு வழங்க வேண்டும். உணவூட்டு செலவு மானியத்தை விலைவாசிக்கு ஏற்றவாறு உயர்த்தி வழங்குதல் அவசியம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பணியாற்றி வரும் சத்துணவு அமைப்பாளர்கள் நேற்று காலை நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன் திரண்டனர். பின்னர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு ஜெபமணி தலைமை தாங்கினார். ராமசந்திரன், மரியசார்லஸ், அனுசுயா, கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் பொன்பாக்கிய தீபா, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கனகராஜ், தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதன்பிறகு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியபடி அனைவரும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கலெக்டர் அலுவலகம் முன் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு ஏற்கனவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் துரிதமாக செயல்பட்டு மறியலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். அந்த வகையில் 145 பெண்கள் உள்பட மொத்தம் 150 பேரை போலீசார் கைது செய்தார்கள்.

பின்னர் அனைவரையும் நேசமணிநகர் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். சாலை மறியல் போராட்டத்தில் சத்துணவு அமைப்பாளர்களே அதிகளவில் கலந்துகொண்டார்கள். சமையலர்கள் மற்றும் உதவியாளர்கள் பங்கேற்கவில்லை. இதன் காரணமாக அனைத்து சத்துணவு மையங்களிலும் சத்துணவு பணிகள் தடையின்றி நடந்தன.

மேலும் செய்திகள்