இந்துத்வா கொள்கை சோனியாவிடம் தலைவணங்குகிறது; தேவேந்திர பட்னாவிஸ் கடும் தாக்கு

சிவசேனாவின் முதல்-மந்திரி பதவி ஆசைக்காக இந்துத்வா கொள்கை சோனியா காந்தியிடம் தலைவணங்குகிறது என்று தேவேந்திர பட்னாவிஸ் கடுமையாக தாக்கினார்.

Update: 2019-11-26 23:45 GMT
மும்பை,

மராட்டிய அரசியலில் நேற்று திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவார் துணை முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து தேவேந்திர பட்னாவிசும் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகினார்.

முன்னதாக தேவேந்திர பட்னாவிஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார் எங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு செய்திருந்தார். இது தொடர்பாக விவாதித்து நாங்கள் ஆட்சி அமைத்தோம்.

இந்த நிலையில் இன்று (நேற்று) அஜித்பவார் என்னை சந்தித்தார். அப்போது சில தனிப்பட்ட காரணங்களுக்காக கூட்டணியில் தொடர முடியாத நிலையில் இருப்பதாக கூறி அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் தான் எங்களுக்கு (பாரதீய ஜனதா) போதிய பெரும்பான்மை இல்லை.

சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க எம்.எல்.ஏ.க்களை பாரதீய ஜனதா வேட்டையாடாது என முதல் நாளிலேயே முடிவு செய்து விட்டோம். பாரதீய ஜனதாவை ஆட்சியில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்திலும், சிவசேனாவின் முதல்-மந்திரி பதவி ஆசைக்காகவும் இந்துத்வா கொள்கை சோனியா காந்தியிடம் தலைவணங்குகிறது. அது அவரது காலடியில் ஒப்படைக்கப்பட்டு விட்டது.

சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் அரசாங்கம் வெவ்வேறு திசையில் ஓடும் மூன்று சக்கரங்களை கொண்ட ஆட்டோ போல தான் இருக்கும். தேர்தலில் மக்கள் தீர்ப்பு சிவசேனாவை விட பாரதீய ஜனதாவுக்கு அதிக ஆதரவாக உள்ளது.

சரத்பவாரின் அரசியல் தந்திரத்தால் அஜித்பவார் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு அளித்தாரா? என்று கேட்கிறீர்கள். இதற்கு சரத்பவார் தான் பதில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

மேலும் செய்திகள்