கிருஷ்ணகிரியில், சத்துணவு ஊழியர்கள் சாலைமறியல் - 70 பேர் கைது

கிருஷ்ணகிரியில் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 70 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-11-26 22:00 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சின்னப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தேவராஜ் கோரிக்கை குறித்து விளக்கி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் நடராஜன் தொடங்கி வைத்து பேசினார். மாநில செயலாளர் மஞ்சுளா சிறப்புரையாற்றினார். இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன் மற்றும் பிற சங்க நிர்வாகிகள் பிரதாப், சரவணன், ஜெயலட்சுமி, கல்யாணசுந்தரம், திம்மராஜ், வெங்கடேசன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். பணிக்கொடையாக அமைப்பாளர்களுக்கு ரூ. 5 லட்சம், சமையலர், சமையல் உதவியாளர்களுக்கு ரூ. 3 லட்சம் வழங்கிட வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் வழங்கிட வேண்டும். சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.

விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உணவு செலவு மானியத்தை ரூ. 5 ஆக உயர்த்திட வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணா சிலை அருகில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 48 பெண் சத்துணவு ஊழியர்கள் உள்பட 70 பேரை போலீசார் கைது செய்து பழையபேட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்