குறைதீர்க்கும் நாள் கூட்டம்: அரசு பள்ளி கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரக்கோரி மனு

கரூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அரங்கநாதன்பேட்டை அரசு பள்ளி கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரக்கோரி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

Update: 2019-11-25 22:45 GMT
கரூர்,

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக கரூர் மாவட்ட தலைவர் மாரியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்தபடி வந்து மனு கொடுத்தனர். அதில், தமிழகத்தில் பட்டியல் சாதி பிரிவில் உள்ள குடும்பன், காலாடி, பண்ணாடி, பள்ளன் உள்ளிட்ட 7 உட்பிரிவுகளையும் ஒன்றிணைத்து தேவேந்திரகுலவேளாளர் என அறிவித்து தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை பட்டியல் சாதி பிரிவில் இருந்து வெளியேற்றி வேளாண் மரபினர் என்கிற புதிய பிரிவில் கொண்டு வந்து அவர்களுக்கு இடஒதுக்கீட்டை மக்கள் தொகை அடிப்படையில் வழங்கிட வேண்டும். இதனை மாவட்ட நிர்வாகம் அரசுக்கு பரிந் துரைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கோவில் வரவு-செலவு கணக்கு

கரூர் அருகே ஆத்தூர் கிராமம் பூலாம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், நாங்கள் பூலாம்பாளையம் ஏழு கன்னிமார் கோவிலை குல தெய்வமாக கொண்டு வழிபட்டு வருகிறோம். 850 குடும்பத்தினர் வரி செலுத்தி வருகிறோம். இந்தநிலையில் கோவிலில் வரவு-செலவு கணக்குகள் குறித்து காட்ட மறுக்கின்றனர். இது தொடர்பாக கேட்டதற்கு முக்கியஸ்தர் ஒருவர் சாதி பெயரை சொல்லி இழிவாக பேசுகிறார். எனவே இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கரூர் அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டம் நடத்தியது தொடர்பாக நர்சுகள் செல்வராணி, தனலட்சுமி மற்றும் மருத்துவமனை ஊழியர் கார்த்தி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் நேற்று குறைதீர்க்கும் கூட்டத்தில் அளித்த மனுவில், எங்களுக்கு பிழைப்பூதியம் வழங்கப்படாமல் உள்ளதால் குடும்பம் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறது. எனவே எங்களது வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தனர்.

பள்ளி கட்டிடம் பயன்பாட்டுக்கு வருமா?

மண்மங்கலம் வட்டம் அச்சமாபுரத்தை சேர்ந்த சட்டபஞ்சாயத்து இயக்க உறுப்பினர் ஞானசேகர் உள்ளிட்டோர் அளித்த மனுவில், நெரூர் தென்பாகம் கிராமம் அரங்கநாதன் பேட்டையில் செயல்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளியானது வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு செயல்படுகிறது. ஆனால் ரூ.1 கோடி மதிப்பிலான அந்த மேல்நிலைப்பள்ளி கட்டிடமானது பராமரிப்பின்றி கிடப்பில் உள்ளது. எனவே இதில் தபால் நிலையம், நூலகம் ஆகியவற்றை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மருத்துவத்துறை உள்ளிட்ட அரசுத்துறை அலுவலகங்கள் இயங்குவதற்காவது வழிவகை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

குடிநீர் வினியோகம்

ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் கரூர் மாவட்ட செயலாளர் முல்லையரசு உள்ளிட்டோர் அளித்த மனுவில், தாந்தோன்றி ஒன்றியம் அம்மையப்பகவுண்டன்புதூரில் ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வற்றிவிட்டதால் மக்கள் குடிநீருக்காக பல்வேறு இடங்களுக்கு அலைந்து திரிந்து வருகின்றனர். எனவே புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். அந்த பகுதியில் உள்ள மக்கள் தங்களது வீட்டு திருமணம், காதுகுத்து போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஏதுவாக சமுதாய கூடம் கட்டித்தர வேண்டும் என்று கூறியிருந்தனர். மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட தனிதுணை கலெக்டர் பாலசுப்ரமணியன், கலால் பிரிவு உதவி ஆணையர் மீனாட்சி, மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அதிகாரி சென்பகவள்ளி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அதிகாரி லீலாவதி உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்