ஜனதா தளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள் சிலர் எங்களுடன் தொடர்பில் உள்ளனர்; பா.ஜனதா எம்.எல்.ஏ. பரபரப்பு தகவல்
ஜனதா தளம்(எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலர் எங்களுடன் தொடர்பில் இருப்பதாக பா.ஜனதாவை சேர்ந்த அரவிந்த் லிம்பாவளி எம்.எல்.ஏ. பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு வருகிற 5-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் பா.ஜனதா குறைந்தது 6 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே, அக்கட்சி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்ற நிலை உள்ளது. அதனால் அக்கட்சியின் தலைவர்கள் அனைவரும் இடைத்தேர்தல் களத்தில் குதித்து, தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறார்கள்.
ஒருவேளை 6 தொகுதிகளில் வெற்றி கிடைக்காவிட்டால், பா.ஜனதா ஆட்சி கவிழும். இந்த நிலை ஏற்பட்டால், ஜனதா தளம்(எஸ்) கட்சி சில நிபந்தனைகளுடன் பா.ஜனதா அரசுக்கு ஆதரவு அளிக்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படு கிறது. ஆனால் இதை பா.ஜனதாவில் உள்ள சில தலைவர்கள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
ஜனதா தளம்(எஸ்) கட்சியின் ஆதரவை பெறுவதைவிட, ஜனதா தளம்(எஸ்) கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் சிலரை ராஜினாமா செய்ய வைத்து அதன் மூலம் பெரும்பான்மை பலத்தை பெற பா.ஜனதா தலைவர்கள் திட்டமிட்டு உள்ளனர். இதை வெளிப்படுத்தும் வகையில் கர்நாடக பா.ஜனதா பொதுச் செயலாளர் அரவிந்த் லிம்பாவளி எம்.எல்.ஏ., ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் தொடர்பில் இருப்பதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த சிலர் எங்களின் தொடர்பில் உள்ளனர். இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகு இதுபற்றி தெரியவரும். எத்தனை எம்.எல்.ஏ.க்கள் தொடர்பில் உள்ளனர் என்பது இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகே தெரியும். அக்கட்சியை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் முடிவு செய்துள்ளனர்.
இவ்வாறு அரவிந்த் லிம்பாவளி கூறினார்.