இடைத்தேர்தலில் ரமேஷ் ஜார்கிகோளியை வீழ்த்துவதே எங்களது முதல் குறிக்கோள்; சகோதரர் சதீஷ் ஜார்கிகோளி சூளுரை
இடைத்தேர்தலில் ரமேஷ் ஜார்கிகோளியை வீழ்த்துவதே எங்களது முதல் குறிக்கோள் என்று சகோதரர் சதீஷ் ஜார்கிகோளி சூளுரைத்து உள்ளார்.
பெலகாவி,
பெலகாவி மாவட்டத்தை பாண்டவர் பூமி என்று சொல்லலாம். அந்த அளவுக்கு ஜார்கிகோளி சகோதரர்கள் 5 பேரும் அரசியல் களம் கண்டுள்ளனர். தற்போது பாலசந்திர ஜார்கிகோளி, சதீஷ் ஜார்கிகோளி, ரமேஷ் ஜார்கிகோளி, லக்கன் ஜார்கிகோளி ஆகியோர் அரசியல் களத்தில் பம்பரமாக சுழன்று வருகிறார்கள். இவர்களின் இன்னொரு சகோதரர் அரசியலில் நுழைந்து பின்னர் விலகி இருந்து வருகிறார். ரமேஷ்ஜார்கிகோளி, சதீஷ் ஜார்கிகோளி ஆகியோர் கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
இதில் ரமேஷ் ஜார்கிகோளி, கூட்டணி அரசு மீதான அதிருப்தியால் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் கோகாக் தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கிறது. பா.ஜனதா வேட்பாளராக ரமேஷ் ஜார்கிகோளி களமிறங்கியுள்ளார். காங்கிரஸ் சார்பில் இவரது சகோதரர் லக்கன் ஜார்கிகோளி கோதாவில் குதித்துள்ளார். இவருக்கு சதீஷ்ஜார்கிகோளி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ரமேஷ் ஜார்கிகோளிக்கு முன்னாள் மந்திரி பாலசந்திர ஜார்கிகோளி ஆதரவு திரட்டி வருகிறார். இந்த சகோதர யுத்தத்தில் வெல்லப்போவது யார் என்ற பரபரப்பு வாக்காளர்கள் மத்தியில் பரவிக்கிடக்கிறது. இந்த நிலையில் இடைத்தேர்தல் குறித்து சதீஷ் ஜார்கிகோளி நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த இடைத்தேர்தலை பொறுத்தவரை எங்களது முதல் குறிக்கோள் பா.ஜனதாவை தோற்கடிப்பது அல்ல. ரமேஷ் ஜார்கிகோளியை வீழ்த்துவது தான். பா.ஜனதா எங்களுக்கு 2-வது பட்சம் தான். காங்கிரசை சேர்ந்த மேலும் 13 எம்.எல்.ஏ.க்கள் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக ரமேஷ்ஜார்கிகோளி கூறியுள்ளார். அவ்வாறு யாரும் அவருடன் தொடர்பு இல்லை. இடைத்தேர்தலில் அவர் தோற்பது உறுதி. கர்நாடகத்தில் காங்கிரஸ் இல்லாத நிலையை உருவாக்குவதாக அவர் கூறியுள்ளார். முதலில் அவர் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவாரா என்பதை பார்ப்போம்.
இடைத்தேர்தலில் எங்கள் கட்சியின் தலைவர்கள் சித்தராமையா, தினேஷ்குண்டுராவ் ஆகியோர் பிரசாரம் செய்துள்ளனர். மேலும் உள்ளூர் நிர்வாகிகளும் சேர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறோம். கோகாக் தொகுதியில் லக்கன் ஜார்கிகோளி வெற்றி பெறுவது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.