உன்சூர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் எச்.விஸ்வநாத்திடம் கேள்வி கேட்ட கிராம மக்கள் “எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தது ஏன்?”
உன்சூர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் எச்.விஸ்வநாத்திடம், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தது ஏன் என்று கிராம மக்கள் கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரு,
மைசூரு மாவட்டம் உன்சூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் எச்.விஸ்வநாத். ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த இவர், அக்கட்சியின் மாநில தலைவராகவும் இருந்தார். குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி மீதான அதிருப்தியால் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இவருடன் 14 எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்தனர். இதனால் கூட்டணி அரசு கவிழ்ந்தது.
இதைதொடர்ந்து கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் எச்.விஸ்வநாத் உள்பட 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் 15 தொகுதிகள் இடைத்தேர்தலை எதிர்கொள்கின்றன. இதில் உன்சூர் தொகுதியும் ஒன்று. இந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் எச்.விஸ்வநாத் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். அவரை தோற்கடிக்க காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. எச்.பி.மஞ்சுநாத், ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் சோமசேகர் ஆகியோர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளனர்.
தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே இருப்பதால் உன்சூர் தொகுதியில் தேர்தல் பிரசாரம் களைகட்டி வருகிறது. இந்த நிலையில் உன்சூர் தொகுதிக்கு உட்பட்ட சரவணஹள்ளி கிராமத்திற்கு பா.ஜனதா வேட்பாளர் எச்.விஸ்வநாத் சென்றார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய கிராமமக்கள், கடந்த சட்டசபை தேர்தலில் உங்களுக்கு வாக்களித்து எம்.எல்.ஏ.வாக ஆக்கினோம். ஆனால் எங்கள் ஊர் பக்கமே நீங்கள் வரவில்லை.
மேலும் எங்களிடம் கூறாமல் நீங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தீர்கள். எதற்காக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தீர்கள் என சரமாரியாக கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் எச்.விஸ்வநாத் எந்த பதிலும் பேச முடியாமல் அமைதியாக நின்றார்.
இதனால் அங்கு திடீரென்று பரபரப்பு உண்டானது. உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசாரும், பா.ஜனதாவினரும் கிராம மக்களை சமாதானப்படுத்தினர்.