தலைமை செயலகத்துக்கு வரும் பொதுமக்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அனுமதிச்சீட்டு - பரீட்சார்த்த முறையில் நடவடிக்கை

தலைமைச் செயலகத்துக்கு வரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக புகைப்படத்துடன் கூடிய அனுமதிச் சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Update: 2019-11-25 22:45 GMT
சென்னை,

சென்னை கடற்கரை சாலையில் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டை 107.50 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. அங்கு தமிழக அரசின் தலைமைச் செயலகம் மற்றும் பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

தலைமைச் செயலகத்திற்குள் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், அரசு துறை செயலாளர்கள் உள்பட பல அதிகாரிகளின் அலுவலகங்கள் அமைந்துள்ளன. எனவே அங்கு 24 மணிநேரமும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தலைமைச் செயலக அலுவலகங்கள் இயங்கும் நேரங்களில், அமைச்சர்கள், உயர் அதிகாரிகளை சந்திப்பதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், வெளிநாட்டவர்கள் அங்கு தினமும் வருகிறார்கள். அவர்களின் பெயர் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு அனுமதிக்கப்படுகின்றனர்.

இதற்காக தலைமைச் செயலகத்தின் நுழைவு வாயிலில் போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள், தலைமைச் செயலகத்துக்கு வரும் பொதுமக்களின் பெயர், யாரை பார்க்க செல்கிறார்? என்பது போன்ற விவரங்களை பதிவு செய்கின்றனர். பின்னர் தலைமைச் செயலகத்தின் உட்பகுதியில் உள்ள அலுவலகத்தில் அவர்களுக்கான அனுமதிச்சீட்டு வழங்கப்படுகிறது.

இந்தநிலையில், புகைப்படத்துடன் கூடிய அனுமதிச் சீட்டை வழங்குவதற்கான பரீட்சார்த்த முறையிலான நடவடிக்கை நேற்று தொடங்கியது. தலைமைச் செயலக நுழைவு வாயிலில் பொதுமக்களின் அடையாள அட்டையை படம் எடுத்து, அவரது போன் எண்ணை போலீசார் பதிவு செய்கின்றனர்.

பின்னர் அவரை அதற்கான கேமராவில் படம் பிடிக்கின்றனர். இந்த விபரங்கள் அனைத்தும் புகைப்படத்துடன் சேர்த்து சீட்டு ஒன்றில் பதிவாகிறது. அதை பிரிண்ட் எடுத்து அந்த நபரிடம் வழங்குகின்றனர். இதற்காக தனி கருவியை வைத்துள்ளனர். இந்தச் சீட்டு, அது அளிக்கப்படும் நாளுக்கு மட்டும் செல்லுபடியாகும்.

ஆனால் தற்போது நுழைவு வாயில் வழியாக நடந்து வருவோருக்கு மட்டுமே இந்த அனுமதிச்சீட்டு வழங்கப்படுகிறது. மோட்டார் சைக்கிள், கார் போன்ற வாகனங்களில் வருவோருக்கும் அனுமதிச்சீட்டு வழங்குவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மும்பையில் உள்ள மராட்டிய மாநில தலைமைச் செயலகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே, புகைப்பட அனுமதிச் சீட்டு வழக்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டுவிட்டது. அங்கு யாரைப் பார்க்க வேண்டும் என்று பார்வையாளர் குறிப்பிடுகிறாரோ, அவரை மட்டுமே பார்வையாளர் சந்திக்க முடியும். வேறு யாரையும் சந்திக்க அனுமதி கிடைக்காது.

அவரை சந்தித்த பிறகு, அவரது கையெழுத்தை பார்வையாளர் பெற்றிருக்க வேண்டும். அந்தச் சீட்டை வெளியே போகும்போது திருப்பி ஒப்படைக்க வேண்டும்.

இதே நடைமுறை, சென்னை தலைமைச் செயலகத்திலும் செயல்படுத்தப்படுமா?, எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்பதெல்லாம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

மேலும் செய்திகள்