திருப்பத்தூர் மாவட்ட தொடக்க விழாவுக்கு, முதல்-அமைச்சர் வருவதையொட்டி பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார்
திருப்பத்தூர் மாவட்ட தொடக்க விழாவுக்கு முதல்-அமைச்சர் வருவதையொட்டி பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளதாக ஐ.ஜி.நாகராஜன் தெரிவித்தார்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் புதிய மாவட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 28-ந் தேதி (வியாழக்கிழமை) தொடங்கி வைக்கிறார். இதற்கான விழா திருப்பத்தூர் தொன்போஸ்கோ பள்ளியில் நடக்கிறது. அங்கு பிரமாண்ட பந்தல், சாலை அமைக்கும் பணி உட்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் விழா மேடைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற பாதை மற்றும் மேடை, பொதுமக்கள் உள்ளே வரும் நுழைவாயில், அமரும் இடம், தடுப்புகள் அமைக்கும் பணிகள் ஆகியவற்றை போலீஸ் வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன் நேரில் ஆய்வு செய்தார். அவருடன் டி.ஐ.ஜி. காமினி, திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சி.விஜயகுமார் ஆகியோர் சென்றனர்.
பின்னர் வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் வருவதையொட்டி பாதுகாப்பு பணியில் 2 போலீஸ் சூப்பிரண்டுகள், 3 ஏ.டி.எஸ்.பிக்கள் 6 டி.எஸ்.பி. மேற்பார்வையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதில் முதல்-அமைச்சர் வரும் பாதையில் 1000 போலீசார் நிறுத்தப்படுகின்றனர்.
தொன்போஸ்கோ பள்ளியில் முதல்-அமைச்சர் கான்வாய் வரும் பாதை மற்றும் அமைச்சர்கள், பொதுமக்கள், பயனாளிகள் உள்ளே வருவதற்கு தனித்தனி பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளது. விழாவுக்கு வரும் பொதுமக்கள், பயனாளிகள் அனைவரையும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்தபின்னரே உள்ளே அனுப்பப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது திருப்பத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் தங்கவேல், பாலகிருஷ்ணன், சச்சிதானந்தம், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ரவி உட்பட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உடன் இருந்தனர்.