பெட்ரோலை ஊற்றி போலீஸ்காரரை உயிருடன் எரித்து கொலை செய்ய முயன்ற கள்ளக்காதலி

பெட்ரோலை ஊற்றி போலீஸ்காரரை உயிருடன் எரித்து கொலை செய்ய முயன்ற கள்ளக்காதலியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-11-24 22:45 GMT
ஆவடி,

சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் சத்தியமூர்த்திநகர் போலீஸ் குடியிருப்பைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 30). இவர், ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை 2-ம் பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

இவர், பள்ளியில் படிக்கும்போதே ஜெயா (27) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகளும், 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

கருத்து வேறுபாடு காரணமாக ஜெயா, கணவரை விட்டு பிரிந்து மகனுடன் புளியந்தோப்பில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். வெங்கடேஷ், தனது மகளுடன் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர்களின் விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையில் போலீஸ்காரர் வெங்கடேசுக்கு, ஏற்கனவே திருமணமாகி கணவர், 2 மகன்களுடன் வசித்து வந்த ஆஷா (31) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. அவர், கணவர் மற்றும் மகன்களை விட்டுவிட்டு வெங்கடேசுடன் அவரது வீட்டில் கணவன்-மனைவி போல் வசித்து வந்தார்.

கடந்த சில மாதங்களாக ஆஷா, போலீஸ்காரர் வெங்கடேசுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி அவருடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில் மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

பின்னர் வெங்கடேஷ், வீட்டின் ஹாலில் படுத்து தூங்கிவிட்டார். ஆனால் ஆஷா, தூங்காமல் வெங்கடேஷ் மீது கடும் ஆத்திரத்தில் இருந்தார்.

நள்ளிரவு 1 மணியளவில் ஆஷா, திடீரென வீட்டில் இருந்த பெட்ரோலை எடுத்து வந்து அங்கு தூங்கிக்கொண்டிருந்த போலீஸ்காரர் வெங்கடேஷ் மீது ஊற்றி, தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் உடல் முழுவதும் தீ பரவியதால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்த வெங்கடேஷ், குளியல் அறைக்குள் ஓடிச்சென்று உடலில் எரிந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தார். பின்னர் எரிச்சல் தாங்காமல் அலறி அடித்தபடி வெளியே ஓடிவந்தார்.

இதுபற்றி பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், வெங்கடேசை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து வெங்கடேஷ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று மதியம் அவரது கள்ளக்காதலி ஆஷாவை கைது செய்தனர்.

வெங்கடேசுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது. அதை தட்டிக்கேட்டதில் ஏற்பட்ட தகராறில் அவரை பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்து கொலை செய்ய முயன்றதாக ஆஷா கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆஷா மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்