உயர்அழுத்த மின்பாதையில் பலூன்கள் சிக்கியதால் தாம்பரம்- எழும்பூர் இடையே மின்சார ரெயில் போக்குவரத்து பாதிப்பு

கோடம்பாக்கம் ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில்வேயின் உயர்மின் அழுத்த பாதையில் விளம்பர அட்டையுடன் பலூன்கள் பறந்து வந்து சிக்கியதால் தாம்பரம்-எழும்பூர் இடையே மின்சார ரெயில் போக்குவரத்து நேற்று காலை அரை மணிநேரம் பாதிக்கப்பட்டது.

Update: 2019-11-24 22:30 GMT
சென்னை,

சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று காலை 9.20 மணி அளவில் கடற்கரைக்கு மின்சார ரெயில் ஒன்று புறப்பட்டது. இந்த ரெயில் கோடம்பாக்கம் ரெயில் நிலையத்துக்கு காலை 10 மணி அளவில் வந்தது. அப்போது கோடம்பாக்கத்தில் நடந்த மாநாடு ஒன்றின் விளம்பரத்தை தாங்கிய அட்டையுடன் பறந்து வந்த 50 பலூன்களின் தொகுப்பு ரெயிலுக்கு தேவையான மின்சாரத்தை அளிக்கும் உயர்அழுத்த மின்சார பாதையில் சிக்கிக்கொண்டது.

இதனை கவனித்த ரெயில் என்ஜின் டிரைவர், தொடர்ந்து ரெயிலை இயக்காமல் நிறுத்தினார். வெகுநேரம் ரெயில் நிற்பதை உணர்ந்த பயணிகள் செய்வது அறியாது திகைத்து நின்றனர். அப்போது, கோடம்பாக்கம் ரெயில் நிலைய அதிகாரிகள் ஒலிபெருக்கியில் 1-வது பிளாட்பாரத்தில் நிற்கும் ரெயிலை தொடர்ந்து இயக்க முடியாது என்பதால் பயணிகள் அனைவரும் ரெயிலை விட்டு இறங்கவும் என்று அறிவித்தனர்.

கோடம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இறங்கிய பயணிகள், ‘ஏன் ரெயிலை நிறுத்தி வைத்துள்ளர்கள்?, தாங்கள் பணிக்கு செல்ல வேண்டும், எப்போது ரெயிலை இயக்குவீர்கள்?’ என்று கேட்டனர். இதற்கு ரெயில் என்ஜின் டிரைவர், உயர்மின் அழுத்த பாதையில் விளம்பர அட்டையுடன் பலூன்கள் சிக்கி இருப்பதால் ரெயிலை இயக்க முடியாது. விளம்பர அட்டையையும், பலூன்களையும் அகற்றினால் தான் இயக்க முடியும். மாறாக இயக்கினால் தீ விபத்து போன்ற அசம்பாவிதம் ஏற்பட்டு விடும். மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது என்று பயணிகளுக்கு விளக்கம் அளித்தார்.

அதற்கு பயணிகள் ரெயிலை இயக்குங்கள் என்று கூச்சல் போட்டனர். ஆனால் சம்பவ இடத்துக்கு ரெயில்வே அதிகாரிகளோ, ரெயில்வே பாதுகாப்பு படையினர் எவருமே வந்து பயணிகளிடம் விளக்கம் அளிக்காததால் அங்கு பரபரப்பு அதிகரித்தது.

அப்பகுதியில் விளையாடிக் கொண்டு இருந்த 4 சிறுவர்கள் கைகளில் கற்களுடன் வந்து விளம்பர அட்டை மீது சரமாரியாக கற்களை வீசினார்கள். இதில் உயர்மின் அழுத்தப் பாதையில் சிக்கிக்கொண்டு இருந்த விளம்பர அட்டை தண்டவாளத்தில் வந்து விழுந்தது. உடனடியாக ரெயில் என்ஜின் டிரைவர், ரெயிலில் இருந்து உயர் மின்அழுத்த பாதையை தொட்டு கொண்டு இருக்கும் கருவியை சுருக்கி கொண்டு மெதுவாக ரெயிலை இயக்கினார்.

ஆனால் பயணிகள் பலர் பெரும் விபத்து ஏற்படும் என்பதால் ரெயிலில் ஏற மறுத்துவிட்டனர். பின்னர் அரை மணிநேர போராட்டத்துக்கு பின்னர் ரெயில் மெதுவாக அப்பகுதியை கடந்து சென்றது. இதனால் சுமார் அரைமணி நேரம் பயணிகள் அவதிப்பட்டனர். தொடர்ந்து இதுபோன்று அடிக்கடி உயர்மின் அழுத்தப்பாதையில் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க ரெயில்வே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்