வேப்பூரில், மோட்டார் சைக்கிள்கள் திருடியவர் கைது
வேப்பூரில் மோட்டார் சைக்கிள்களை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
வேப்பூர்,
வேப்பூர் அருகே உள்ள ஆதியூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலு (வயது 54). இவர் சம்பவத்தன்று வேப்பூரில் உள்ள ஜவுளிகடை முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, கடைக்குள் சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
இதேபோல் நகர் கிராமத்தை சேர்ந்த குணசேகரன் மகன் சரவணன்(32) என்பவர் வேப்பூர் கூட்டுரோட்டில் உள்ள திருமண மண்டபத்தின் அருகில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளையும் மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர். இதுமட்டுமின்றி வேப்பூரில் கடந்த சில நாட்களாக இருசக்கர வாகனங்கள் திருடுபோவது தொடர் கதையாக உள்ளது. இதுபற்றி போலீசாருக்கு பல்வேறு புகார்கள் சென்றன.
அதன்பேரில் திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் உத்தரவின் பேரில் வேப்பூர் சப்–இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார் வேப்பூர் அருகே பெரியநெசலூர் பேருந்து நிறுத்தம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை மறித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் சேப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் ஆண்டபெருமாள்(42) என்பதும், வேப்பூரில் 2 மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆண்டபெருமாளை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.