தோசை கரண்டியால் அடித்தும், சிகரெட்டால் சூடு வைத்தும் 5 வயது சிறுவனை துன்புறுத்திய தாயின் கள்ளக்காதலன் கைது
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 5 வயது சிறுவனை தோசை கரண்டியால் அடித்தும், சிகரெட் நெருப்பால் சூடு வைத்தும் துன்புறுத்திய தாயின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பூர்,
சென்னை கொருக்குப்பேட்டை பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் கடம்பன் (வயது 36). கட்டிடத்தொழிலாளியான இவரது சொந்த ஊர் மதுரை. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் மதுரையில் வசித்து வருகின்றனர்.
கடம்பன், கோவையில் தங்கி கட்டிடவேலை செய்யும்போது, அதே பகுதியில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த 28 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறியது.
கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கடம்பன், தனது கள்ளக்காதலி மற்றும் அவரது 2 குழந்தைகளுடன் கொருக்குப்பேட்டையில் உள்ள இந்த வீட்டில் தங்கி, கணவன்-மனைவி போல் வசித்து வந்தார்.
துன்புறுத்தியதாக புகார்
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக கூறி தனது கள்ளக்காதலியின் 5 வயது மகனை கடம்பன் அடிக்கடி துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுவனை, தோசை கரண்டியால் அடித்ததுடன், சிகரெட் நெருப்பால் அவனது கன்னம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் கடம்பன் சூடு வைத்தும் துன்புறுத்தினார்.
இதில் கன்னத்தில் தீக்காயம் அடைந்த சிறுவன், அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றான். இதுபற்றி அந்த பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் குழந்தைகள் நல ஆணையத்தில் புகார் செய்தார்.
கள்ளக்காதலன் கைது
இதையடுத்து கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக குழந்தையை அடித்து துன்புறுத்துவதாக கடம்பன் மீது கொருக்குப்பேட்டை போலீசில் குழந்தைகள் நல அமைப்பினர் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலன் கடம்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த பெண் மற்றும் அவருடைய குழந்தைகளை மீட்டு சென்னையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.