நல்லம்பள்ளி அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு நண்பர்களுடன் குளித்த போது பரிதாபம்

நல்லம்பள்ளி அருகே நண்பர்களுடன் குளித்த போது ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

Update: 2019-11-23 22:15 GMT
நல்லம்பள்ளி,

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள கோட்டைகாரனூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவருடைய மகன் தம்பிதுரை (வயது13). இவன் அதியமான்கோட்டை அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாணவன் அதேபகுதியை சேர்ந்த தனது நண்பர்கள் 4 பேருடன் மீன் பிடிப்பதற்காக அந்த பகுதியில் உள்ள சோளவராயன் ஏரிக்கு சென்றான்.

பின்னர் சிறுவர்கள் 5 பேரும் ஏரியில் குளித்தனர். அப்போது தம்பிதுரை ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவன் திடீரென தண்ணீரில் மூழ்கினான். இதனால் அதிர்ச்சி அடைந்த அவனது நண்பர்கள் ஊருக்கு வந்து நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தனர். உடனே கிராமமக்கள் ஏரிக்கு சென்றனர். அதற்குள் மாணவன் ஏரியில் மூழ்கி இறந்து விட்டது தெரியவந்தது.

உடல் மீட்பு

இதுகுறித்து தர்மபுரி தீயணைப்பு நிலையத்திற்கும், அதியமான்கோட்டை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் விரைந்து சென்று ஏரியில் முழ்கி இறந்த மாணவனின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். அப்போது அங்கு திரண்டு இருந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

பின்னர் போலீசார், இறந்த மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவன் இறந்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவன் ஏரியில் மூழ்கி இறந்ததால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

மேலும் செய்திகள்