துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்பு: பா.ஜனதாவின் வலையில் அஜித் பவார் சிக்கியது எப்படி?

மராட்டிய துணை முதல்-மந்திரியாக நேற்று பதவி ஏற்ற தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், சரத்பவாரின் அண்ணன் மகனுமான அஜித்பவார்.பா.ஜனதாவின் வலையில் அஜித் பவார் சிக்கியது எப்படி.

Update: 2019-11-23 23:15 GMT
மராட்டிய துணை முதல்-மந்திரியாக நேற்று பதவி ஏற்ற தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், சரத்பவாரின் அண்ணன் மகனுமான அஜித்பவார் மீது கூட்டுறவு வங்கி முறைகேடு வழக்கு நிலுவையில் உள்ளது. கோர்ட்டு உத்தரவின் பேரில், அவர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். அதன் அடிப்படையில் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது.

இந்த நிலையில் மராட்டிய சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியாக சில நாட்கள் இருந்த நிலையில், அமலாக்கத்துறை அஜித்பவார் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்கில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் பெயரையும் சேர்த்தது. இதையடுத்து அமலாக்கத்துறையின் விசாரணைக்கு நேரில் ஆஜராக உள்ளதாக சரத்பவார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போது ஒட்டுமொத்த தேசியவாத காங்கிரஸ் தலைவர்களும் மும்பையில் முகாமிட்டு இருந்தனர். ஆனால், அஜித் பவார் மட்டும் மும்பைக்கு வரவில்லை. மேலும் அஜித்பவார், சரத் பவாரிடம் சொல்லாமலே எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

இதேபோல அஜித் பவாரின் மகன் பார்த் பவாருக்கும் நீண்ட இழுபறிக்கு பிறகு தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கப்பட்டது. இதனால் அஜித் பவார், சரத்பவார் மீது அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதேபோல கட்சி தொடர்பான முடிவுகளை எடுப்பதில் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலேவிற்கும், அஜித் பவாருக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்ததாக தெரிகிறது.

சமீபத்தில் கூட மும்பையில் உள்ள சரத்பவார் வீட்டில் இருந்து வெளியேறிய அஜித்பவார், சிவசேனாவுடன் கூட்டணி அமைப்பது குறித்து காங்கிரஸ் உடனான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுவிட்டதாக கூறிவிட்டு பாராமதி புறப்பட்டு சென்றார். இதனால் அஜித்பவாருக்கும், கட்சியினருக்கும் இடையே விரிசல் விழுந்தது தெரியவந்தது.

இதற்கு மத்தியில் ஊழல் வழக்கில் சிக்கிய அஜித்பவாரின் பலவீனத்தை பாரதீய ஜனதா தனக்கு சாதகமாக எடுத்து கொண்டு அவரை வளைத்து போட்டு விட்டதாக கூறப்படுகிறது.

இதுபோன்ற காரணங்களால் தான் கடைசி நேரத்தில், பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்க அவர் முன்வந்ததாக கூறப்படுகிறது.

அஜித் பவாரை மிரட்டி பா.ஜனதா அவரது ஆதரவை பெற்றதாக காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபமும் குற்றம்சாட்டி உள்ளார்.

அமலாக்கத்துறை வழக்கு மற்றும் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் குழப்பத்தில் இருந்த அஜித் பவாரின் சந்தர்ப்பத்தை பாரதீய ஜனதா, பயன்படுத்தி கொண்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

மேலும் செய்திகள்