சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்லும் மின்சார ரெயிலில் இரவு நேரங்களில் போலீஸ் பாதுகாப்பு இல்லை பெண் பயணிகள் குமுறல்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்லும் மின்சார ரெயிலில் இரவு நேரங்களில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுவதில்லை என பெண் பயணிகள் குமுறுகின்றனர்.
சென்னை,
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு வேலை நிமித்தமாக வந்து செல்வோரின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வதில் மின்சார ரெயில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் பயணிகளின் பாதுகாப்பு என்பது முக்கியமானதாகும். பாதுகாப்புக்காக எவ்வளவுதான் ரெயில்வே பாதுகாப்புப்படை மற்றும் ரெயில்வே போலீசார் ஈடுபடுத்தப்பட்டாலும் அவ்வப்போது ஏதாவது ஒரு அசம்பாவிதங்கள் கொண்டுதான் இருக்கிறது.
கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இரவு வேளச்சேரியில் இருந்து கடற்கரைக்கு வந்த மின்சார ரெயிலின் பெண்கள் பெட்டியில் ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்யும் இளம்பெண் ஒருவர் பயணித்தார். அப்போது பெண்கள் பெட்டியில் பயணித்த மர்ம ஆசாமி ஒருவர் அந்த இளம்பெண்ணை கடுமையாக தாக்கி நகைப்பறிப்பில் ஈடுபட்டதோடு, ஈவு இரக்கமின்றி ஓடும் ரெயிலில் இருந்து அந்த பெண்ணை வெளியே தள்ளிவிட்டார். இதில் அந்த இளம்பெண் பலத்த காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
பெண் பயணிகள் பீதி
இந்த சம்பவம் அன்று பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து அனைத்து மின்சார ரெயில்களிலும் குறிப்பாக, பெண்கள் பெட்டியில் துப்பாக்கியுடன் ரெயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டனர். இதற்காக மற்ற பகுதிகளில் இருந்தும் கூடுதலாக ரெயில்வே பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர்.
ஆனால் தற்போது மின்சார ரெயில்களில் பெண்கள் பாதுகாப்புக்கு இரவு நேரங்களில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் செல்வதில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் பெண்கள் பெட்டியில் சில ஆண்கள் பயணிப்பதால், உடன் பயணிக்கும் பெண் பயணிகள் பீதி அடைகின்றனர். இது குறித்து பெண் பயணி ஒருவர் கூறியதாவது:-
‘பெப்பர் ஸ்பிரே’
நான் தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். பணி முடிந்து தினமும் இரவு 9 மணிக்கு தான் வீட்டிற்கு புறப்படுவேன். மின்சார ரெயிலில் பெண்கள் பெட்டியில் தான் பயணிப்பேன். அந்த சமயங்களில் ஒரு சில பெண் பயணிகள்தான் என்னுடன் பயணம் செய்வார்கள். அதிகபட்சமாக எழும்பூர் வரை மட்டுமே அவர்கள் வருவார்கள்.
கடற்கரை ரெயில்நிலையம் வரை செல்ல வேண்டிய நான், சில நேரங்களில் பெண்கள் பெட்டியில் தனியாகவே பயணிக்க வேண்டிய நிலை இருக்கிறது. அங்கு பாதுகாப்புக்காக எந்த போலீசாரும் இருக்கமாட்டார்கள். ஒரு சில ஆண்கள், இரவு நேரங்களில் பெண்கள் பெட்டியில் ஏறிவிடுகின்றனர். அதனால் நான் ஒருவித அச்சத்துடனேயே பயணிக்க வேண்டியுள்ளது.
ரெயில் நிலையம் வந்து வீடு போய் சேரும் வரை உயிரை கையில் பிடித்து கொண்டு, பயத்துடனே தினமும் சென்று வருகிறேன். கடந்த சில மாதங்களாகவே இப்படி தான் சென்று கொண்டிருக்கிறேன். எனது பாதுகாப்புக்காக ‘பெப்பர் ஸ்பிரே’ வைத்துள்ளேன். அது எந்த அளவுக்கு எனக்கு கைக்கொடுக்கும் என்பது தெரியாது. போலீசார் இதற்கான நடவடிக்கை எடுத்து, எங்களுக்கான பாதுகாப்பில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாதுகாப்பு தளர்வு
அசம்பாவிதம் நடந்த பிறகு, 10 நாட்களுக்கு ரெயில்வே பாதுகாப்புப்படை மற்றும் ரெயில்வே போலீசார் மிடுக்காக பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர். பின்னர், அந்த பாதுகாப்பை தளர்த்தி, எங்களுக்கு என்ன? என்றவாறு இருந்துவிடுகின்றனர். பின்னர் அடுத்த சம்பவம் நடக்கும்போது மீண்டும் பாதுகாப்பில் ஈடுபடுவதுபோல் மெனக்கிடுகின்றனர்.
ஒரு முறை ஒரு திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வரும்போது, அதை இறுதி வரை போலீசார் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் கோரிக்கையாக உள்ளது.