முல்லைப்பெரியாற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு: தடுப்பணையில் குளிக்க தடை
முல்லைப்பெரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வீரபாண்டி தடுப்பணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
உப்புக்கோட்டை,
தேனி அருகே உள்ள வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற கவுமாரி அம்மன் மற்றும் கண்ணீஸ்வரமுடையார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில்களில் வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி தேனி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு முன்பு அங்குள்ள முல்லைப்பெரியாற்று தடுப்பணையில் நீராடுவது வழக்கம். இதுதவிர தமிழகத்தை கேரளாவுடன் இணைக்கும் திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலை வீரபாண்டி வழியாக தான் செல்கிறது. இந்த சாலை வழியாக தான் குமுளி, முல்லைப்பெரியாறு, தேக்கடி, சபரிமலை போன்ற முக்கிய இடங்களுக்கு செல்ல முடியும். அவ்வாறு இந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் முல்லைப்பெரியாற்று தடுப்பணையில் குளித்து மகிழ்வார்கள்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் முல்லைப்பெரியாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனைத்தொடர்ந்து முல்லைப்பெரியாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதையொட்டி பாதுகாப்பு கருதி வீரபாண்டி தடுப்பணை மற்றும் அதன் அருகில் குளிப்பதற்கு பேரூராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.
மேலும் பக்தர்கள் ஆபத்தான குளியலை தவிர்க்க பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகம் அறிவுறுத்தலின் படி 4 பணியாளர்கள் முல்லைப்பெரியாற்றின் தடுப்பணை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் படித்துறை அமைந்துள்ள பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்பாக குளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.