கோவை அருகே வனப்பகுதியில் கைதான, மாவோயிஸ்டு தீபக் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது
கோவை அருகே வனப்பகுதியில் கைதான மாவோயிஸ்டு தீபக் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.
கோவை,
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அருகே உள்ள மஞ்சக்கண்டி வனப்பகுதியில் கடந்த மாதம் 28-ந் தேதி சிறப்பு அதிரடிப்படை போலீசாருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் மாவோயிஸ்டு முக்கிய தலைவரான சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியை சேர்ந்த மணிவாசகம், கார்த்திக், அஜிதா, சுரேஷ் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
படுகாயம் அடைந்த தீபக் மற்றும் 2 பெண் மாவோயிஸ்டுகள் தப்பிச்சென்றனர். இதில் தீபக் மாவோயிஸ்டுகளில் மிகவும் முக்கியமான நபர் ஆவார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி தமிழக சிறப்பு அதிரடிப்படை போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி தலைமையில், அதிரடிப்படை போலீசார் கோவையை அடுத்த ஆனைக்கட்டி மற்றும் அதைச் சுற்றி உள்ள வனப்பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு கேரள வனப்பகுதியில் இருந்து தப்பி வந்த தீபக் மற்றும் 2 பெண் மாவோயிஸ்டுகள் மறைந்து இருந்தனர். அவர்கள் அதிரடிப்படை போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர். இதில் தீபக்கை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கோவை அருகே உள்ள தடாகம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டார். விசாரணைக்கு பிறகு அவர் மீது போலீசார் உபா (சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டம்) என்ற சட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தீபக் காலில் காயம் இருந்ததால் போலீசார் அவரை கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
தற்போது அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். மாவோயிஸ்டு தீபக் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் கிடைத்தது. அதாவது கடந்த 2010-ம் ஆண்டு சத்தீஷ்கார் மாநிலத்தில் நடந்த தாக்குதலில் 76 துணை ராணுவ வீரர்கள் பலியானசம்பவத்தில் தீபக்கிற்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில் மாவோயிஸ்டு தீபக், நாட்டுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதால் அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய கோவை மாவட்ட போலீசார், கலெக்டர் ராஜாமணிக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் நேற்று உத்தரவிட்டார். அதற்கான நகலை சிறையில் இருக்கும் தீபக்கிடம் சிறைத்துறை அதிகாரிகள் வழங்கினார்கள்.
கோவை மத்திய சிறையில் தீபக்கை வைத்திருக்கும் பகுதியின் அருகில்தான் ஏற்கனவே கோவையில் கைதான மாவோயிஸ்டுகள் அனூப், கண்ணன், வீரமணி ஆகியோர் அடைக்கப்பட்டு உள்ளனர். எனவே அவர்கள் 3 பேரும் தீபக்கிடம் பேசிவிடக்கூடாது என்பதற்காக 24 மணி நேரமும் சிறைக்காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அத்துடன் கோவை மத்திய சிறையில் தீபக்கிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
இந்த நிலையில் தீபக்கிற்கு நேற்றுடன் நீதிமன்ற காவல் முடிவடைந்தது. அவருக்கு காலில் ஏற்பட்ட காயம் குணமாகாததால், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த முடிய வில்லை. இதற்கிடையே, நேற்று கோவை மத்திய சிறைக்கு ஆய்வுக்கு சென்ற கோவை மாவட்ட நீதிபதி சக்திவேல், தீபக்கிற்கு நீதிமன்ற காவலை அடுத்த மாதம் (டிசம்பர்) 6-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
இதற்கிடையே, கோவை மத்திய சிறைக்கு சென்ற வக்கீல் பா.ப.மோகன் மற்றும் வக்கீல்கள் மாவோயிஸ்டு தீபக்கை சந்தித்து பேசினர். பின்னர் வெளியே வந்த வக்கீல் பா.ப.மோகன் நிருபர்களிடம் கூறும்போது, தீபக் மீது போலீசார் பொய் வழக்கு பதிவு செய்து உள்ளனர். போலீசார் அனுமதிக்க மறுத்ததால்,. ஐகோர்ட்டு உத்தரவின்பேரில்தான் தற்போது நாங்கள் அவரை சந்தித்து உள்ளோம். தீபக் ஆயுத பயிற்சி அளிப்பதாக கூறுவது பொய். அவரை சத்தீஷ்காருக்கு அழைத்துச்சென்று என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்ல வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக கோர்ட்டில் முறையிட உள்ளோம் என்றார்.