கடனை தள்ளுபடி செய்யக்கோரி மாற்றுத்திறனாளிகள் சாலைமறியல்

கடனை தள்ளுபடி செய்யக்கோரி மாற்றுத் திறனாளிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-11-19 00:36 GMT
புதுச்சேரி,

மகளிர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுக் கழகத்தில் மாற்றுத் திறனாளிகள் பெற்றுள்ள கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவேண்டும், கடனை திருப்பித்தர இயலாத 1,771 பேரின் மாதாந்திர உதவித்தொகையில் இருந்து பிடித்து வைக்கப்பட்டு்ள்ள தொகையை திருப்பி வழங்கவேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை மாநில மாற்றுத்திறனாளிகள் நல சங்கங்களின் ஒருங்கிணைந்த போராட்டக்குழுவினர் நேற்று காலை இந்திராகாந்தி சிலை சந்திப்பில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். தங்களது வாகனங்களை சாலையில் குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் முக்கிய சந்திப்பான அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

கைதான அனைவரையும் கோரிமேடு காவலர் சமுதாய நலக்கூடத்தில் தங்கவைக்க வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். சில மாற்றுத்திறனாளிகள் தங்கள் சொந்த வாகனத்திலேயே அங்கு சென்றனர்.

கைதான அனைவரையும் சிறிது நேரத்தில் விடுவிப்பதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் மாற்றுத்திறனாளிகள் விடுதலையாக மறுப்பு தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து தங்கள் கோரிக்கை தொடர்பாக உறுதி அளித்தால்தான் விடுதலையாவோம் என்று தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் அவர்களுக்கு மதிய உணவு வழங்கினார்கள். ஆனால் அதை சாப்பிட மறுத்து மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்