காங்கிரஸ் முன்னாள் மந்திரிக்கு கத்திக்குத்து கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை; வாலிபர் கைது

மைசூருவில் நள்ளிரவில் காங்கிரசை சேர்ந்த முன்னாள் மந்திரியை கத்தியால் குத்திக் கொல்ல முயற்சி நடந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவர் கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக வாலிபரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Update: 2019-11-19 00:15 GMT
மைசூரு,

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் நரசிம்மராஜ தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர், தன்வீர்சேட். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஆவார். இவர் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பள்ளி கல்வித் துறை மந்திரியாக இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மைசூரு பன்னிமண்டபத்தில் ஒரு திருமண விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்துகொள்ள தன்வீர்சேட் எம்.எல்.ஏ.வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இதனால் அவர் அந்த திருமண விருந்தில் கலந்துகொண்டார். அப்போது நள்ளிரவு 12.45 மணி அளவில் ஒருவருடன் நின்று தன்வீர்சேட் பேசிக் கொண்டிருந்தார். அவர் தனது பையில் இருந்து ஒரு துண்டு பேப்பரை எடுத்தார். அது கீழே விழுந்ததால் தன்வீர்சேட் அதனை எடுக்க கீழே குனிந்தார். அந்த சமயத்தில் சிவப்பு நிற சட்டை அணிந்திருந்த ஒரு வாலிபர் மெதுவாக தன்வீர்சேட் அருகில் வந்தார். தான் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து தன்வீர்சேட் எம்.எல்.ஏ.வின் கழுத்தில் பலமாக குத்திவிட்டு தப்பி ஓடினார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத தன்வீர்சேட் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்து அங்கு கூடியிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் தன்வீர்சேட் எம்.எல்.ஏ.வை மீட்டு சிகிச்சைக்காக மைசூருவில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், தன்வீர்சேட் எம்.எல்.ஏ.வின் கழுத்து பகுதியில் சுமார் 2 இஞ்ச் அளவுக்கு பலத்த காயம் ஏற்பட்டு இருப்பதும், அதில் மூளைக்கு செல்லும் 2 நரம்புகள் துண்டிக்கப்பட்டு இருப்பதையும் கண்டறிந்தனர். மேலும் கத்தியால் குத்தியதில் காயம் அடைந்த தன்வீர்சேட் எம்.எல்.ஏ.வுக்கு அதிகளவில் ரத்தம் வெளியேறி இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை டாக்டர்கள், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது உடல் நலம் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே எம்.எல்.ஏ.வை கத்தியால் குத்திவிட்டு ஓடிய வாலிபரை அங்கு கூடியிருந்தவர்கள் துரத்தி சென்று பிடித்தனர். பின்னர் அந்த வாலிபருக்கு அவர்கள் தர்ம-அடி கொடுத்தனர். சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் என்.ஆர்.மொகல்லா போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் பிடிபட்ட வாலிபரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவரது பெயர் பர்ஹான் (வயது 22) என்பதும், மைசூரு உதயகிரியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் பர்ஹானுக்கும், தன்வீர்சேட் எம்.எல்.ஏ.வுக்கும் இடையே ஏதோ தனிப்பட்ட பிரச்சினை இருந்து வந்ததாகவும், அதனால் பர்ஹான், எம்.எல்.ஏ.வை கத்தியால் குத்திக் கொல்ல முயன்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து என்.ஆர்.மொகல்லா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் மைசூரு மாநகர போலீஸ் கமிஷனர் கே.டி.பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

சம்பவம் பற்றி அவர் நிருபர்களிடம் கூறுகையில், “தன்வீர்சேட் எம்.எல்.ஏ.வை கொல்ல முயற்சி நடந்துள்ளது. இதுதொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைதான வாலிபர், கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் தொழில் செய்து வந்துள்ளார். அவர் பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். தனக்கு வேலை கிடைக்க தன்வீர்சேட் எம்.எல்.ஏ.விடம் வாலிபர் கோரிக்கை வைத்திருந்ததாகவும், ஆனால் அதற்கு அவர் நடவடிக்கை எடுக்காததால் எம்.எல்.ஏ.வை குத்தியதாகவும் வாலிபர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதுபற்றி கைதானவர் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்“ என்றார்.

தன்வீர்சேட் எம்.எல்.ஏ. கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து மைசூருவில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது. இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் தன்வீர்சேட் எம்.எல்.ஏ. சிகிச்சை பெற்று வரும் ஆஸ்பத்திரி முன்பும் காங்கிரசார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர். ஆனால் யாரையும் போலீசார் ஆஸ்பத்திரி உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளதால், அங்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்