பெரியநாயக்கன்பாளையத்தில் பஸ்-லாரி நேருக்கு நேர் மோதல்; 5 பேர் காயம்

பெரியநாயக்கன்பாளையத்தில் பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2019-11-17 22:30 GMT
இடிகரை, 

பெரியநாயக்கன்பாளையத்தில் பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் காயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பஸ்-லாரி மோதல்

கோவை சின்னதடாகம் பகுதியில் இருந்து நேற்று காலை 9 மணியளவில் செங்கல் ஏற்றிக்கொண்டு மேட்டுப்பாளையம் நோக்கி லாரி ஒன்று சென்றது. இந்த லாரியை மதுரையை சேர்ந்த கண்ணன் என்பவர் ஓட்டி வந்தார். இதேபோல் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து சேலத்தை நோக்கி அரசு பஸ் ஒன்று வந்து கொண்டு இருந்தது. பஸ்சை ஊட்டியை சேர்ந்த பிரபு என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள எல்.எம்.டபிள்யூ. பிரிவு அருகே வந்த போது பஸ்சும், லாரியும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் லாரியின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது.

5 பேர் காயம்

இந்த விபத்தில் லாரி டிரைவர் கண்ணன், பஸ் டிரைவர் பிரபு ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மேலும் பஸ்சில் வந்த இடையர்பாளையம் பிரிவை சேர்ந்த கோதை, ஓசூரை சேர்ந்த சத்யா, பாக்கியா ஆகிய 3 பெண்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதுகுறித்து தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காயம் அடைந்த 5 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

இந்த விபத்து குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்