கர்நாடகத்தில் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கலுக்கு இன்று கடைசி நாள்
15 தொகுதிகளுக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தால் 17 சட்டசபை தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டு உள்ளன.
15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்
இதில் மாஸ்கி, ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிகளில் கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் அந்த இரு தொகுதிகளை தவிர்த்து மீதமுள்ள 15 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கடந்த அக்டோபர் மாதம் அறிவித்தது.
அதாவது ஒசக்கோட்டை, கே.ஆர்.புரம், யஷ்வந்தபுரம், மகாலட்சுமி லே-அவுட், சிவாஜிநகர், எல்லாப்பூர், விஜயநகர், காக்வாட், கோகாக், அதானி, இரேகெரூர், ராணிபென்னூர், கே.ஆர்.பேட்டை, உன்சூர், சிக்பள்ளாப்பூர் ஆகிய 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.
இன்று கடைசி நாள்
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 11-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் வரை 96 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர். இதில் அதானி தொகுதியில் 8 பேர், காக்வாட்டில் 6 பேர், கோகாக்கில் 8 பேர், எல்லாப்பூரில் 8 பேர், ராணிபென்னூரில் 3 பேர், விஜயநகரில் 8 பேர், சிக்பள்ளாப்பூரில் 3 பேர், கே.ஆர்.புரத்தில் 7 பேர், யஷ்வந்தபூரில் 7 பேர், மகாலட்சுமி லே-அவுட்டில் 4 பேர், சிவாஜிநகரில் 15 பேர், ஒசக்கோட்டையில் 5 பேர், கே.ஆர்.பேட்டையில் 4 பேர், உன்சூரில் 10 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர்.
இந்த நிலையில் மனு தாக்கல் செய்ய இன்று (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். இதனால் இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.
அரசியல் கட்சி வேட்பாளர்கள்
ஒசக்கோட்டையில் பா.ஜனதா வேட்பாளர் எம்.டி.பி.நாகராஜ் கடந்த 14-ந் தேதி மனு தாக்கல் செய்தார். சிக்பள்ளாப்பூர் பா.ஜனதா வேட்பாளர் சுதாகரும் மனு தாக்கல் செய்துள்ளார். எம்.டி.பி.நாகராஜ் இன்று கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து, இன்னொரு வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார். இதன் மூலம் அவர் தனது பலத்தை காட்ட திட்டமிட்டுள்ளார். இதில் முதல்-மந்திரி எடியூரப்பாவும் கலந்து கொள்கிறார். ஒசக்கோட்டையில் பா.ஜனதாவை சேர்ந்த பச்சேகவுடா எம்.பி.யின் மகன் சரத் பச்சேகவுடா சுயேச்சையாக மனு தாக்கல் செய்துள்ளார். இது பா.ஜனதாவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
மனு தாக்கல் செய்ய இறுதி நாளான இன்று உன்சூர், கே.ஆர்.பேட்டை, கே.ஆர்.புரம் உள்ளிட்ட 15 தொகுதிகளிலும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேச்சைகளும் மனு தாக்கல் செய்ய உள்ளனர். இதனால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக வேட்பு மனு தாக்கல் அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இன்று மாலை மனு தாக்கல் முடிவடைந்த பிறகு மனுக்கள் பரிசீலனை நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. அதன் பிறகு மனுக்களை வாபஸ் பெற 21-ந் தேதி கடைசி நாள் ஆகும். அதன் பிறகு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இடைத்தேர்தல் பிரசார களத்தில் குதிக்கிறார்கள். இது ஒரு மினி சட்டசபை தேர்தலை போலவே இருக்கிறது.
ஆட்சியின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல்
இடைத்தேர்தல் முடிவு, ஆட்சியின் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது என்பதால், இது பா.ஜனதாவுக்கு மிக முக்கியமானதாகும். குறைந்தது 6 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே, பா.ஜனதா ஆட்சி நீடிக்க முடியும். இல்லாவிட்டால் இந்த அரசு தானாகவே கவிழ்ந்துவிடும். அதனால் இடைத்தேர்தல் களத்தில் சுழன்று சுழன்று பணியாற்ற முதல்-மந்திரி எடியூரப்பா, மந்திரிகள் மற்றும் பா.ஜனதா தலைவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.
பா.ஜனதா சார்பில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் 13 பேருக்கு டிக்கெட் வழங்கப்பட்டு உள்ளது. ராணிபென்னூர், சிவாஜிநகர் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதனால் பா.ஜனதாவில் டிக்கெட் எதிர்பார்த்து இருந்தவர்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்களை சமாதானப்படுத்தும் பணியில் முதல்-மந்திரி எடியூரப்பாவும், தேர்தல் பொறுப்பாளர்களும் ஈடுபட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.