இன்று கார்த்திகை விரதம் தொடக்கம்: சேலத்தில் துளசிமாலை, இருமுடி பொருட்கள் விற்பனை அமோகம்

சேலத்தில் அய்யப்ப பக்தர்கள் இன்று முதல் கார்த்திகை விரதம் மேற்கொள்வதால் துளசிமாலை, இருமுடி பொருட்கள் விற்பனை அமோகமாக இருந்தது.

Update: 2019-11-16 22:00 GMT
சேலம், 

சேலத்தில் அய்யப்ப பக்தர்கள் இன்று முதல் கார்த்திகை விரதம் மேற்கொள்வதால் துளசிமாலை, இருமுடி பொருட்கள் விற்பனை அமோகமாக இருந்தது.

கோவில்களில் சிறப்பு பூஜை

கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்வதற்காக அய்யப்ப பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் 1-ந் தேதியன்று துளசி மாலை அல்லது ருத்ராட்ச மாலை அணிந்து விரதம் இருப்பது வழக்கம். அதன்படி, இன்று(ஞாயிற்றுக்கிழமை) கார்த்திகை மாதம் முதல் நாள் என்பதால் சேலம் மாநகரில் உள்ள கோவில்களில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

சேலம் சுகவனேசுவரர் கோவில், சேலம் டவுன் ராஜகணபதி கோவில், சேலம் டவுன் ரெயில் நிலையம் அருகில் உள்ள அய்யப்பன் கோவில், சேலம்-பெங்களூரு ரோட்டில் உள்ள சாஸ்தாநகர் அய்யப்பா ஆசிரமம் மற்றும் முருகன் கோவில்களில் சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் பலர் புனித நீராடிவிட்டு விரதம் மேற்கொள்கிறார்கள்.

விற்பனை அமோகம்

இந்தநிலையில் நேற்று சேலம் கடைவீதியில் உள்ள கடைகளில் விரதம் மேற்கொள்ளவிருக்கும் அய்யப்ப பக்தர்கள் துளசிமாலை, ருத்ராட்சமாலை, குங்குமம், சந்தனம், நெய், இருமுடிப்பை மற்றும் தேங்காய், பொரி, அச்சுவெல்லம் உள்ளிட்ட விரத பொருட்களை ஆர்வமுடன் வாங்கி சென்றதை காணமுடிந்தது.

இதனால் விற்பனை அமோகமாக நடைபெற்றது. மேலும் சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் சாமந்தி, சம்பங்கி, குண்டுமல்லி, அரளி, துளசி உள்ளிட்ட பூக்களின் விற்பனையும் படுஜோராக இருந்தது.

மேலும் செய்திகள்