கியாஸ் டேங்கர் லாரி மீது கார் மோதல் மராத்தி சினிமா பாடகி பலி கணவர் படுகாயம்
மும்பை-நாசிக் நெடுஞ்சாலையில் கியாஸ் டேங்கர் லாரி மீது கார் மோதிய கோர விபத்தில் மராத்தி சினிமா பின்னணி பாடகி பலியானார்.
மும்பை,
மும்பை-நாசிக் நெடுஞ்சாலையில் கியாஸ் டேங்கர் லாரி மீது கார் மோதிய கோர விபத்தில் மராத்தி சினிமா பின்னணி பாடகி பலியானார். அவரது கணவர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கியாஸ் டேங்கர் லாரி மீது கார் மோதியது
நாசிக்கை சேர்ந்தவர் கீதா மாலி(வயது38). பிரபல மராத்தி சினிமா பின்னணி பாடகியான இவர், ஏராளமான பாடல்களை பாடி உள்ளார். இவரது கணவர் விஜய்(40). கடந்த சில தினங்களுக்கு முன்பு கீதா மாலி அமெரிக்காவின் நியூயார்க் சென்றிருந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் நியூயார்க்கில் இருந்து கணவர் விஜயுடன் மும்பை விமான நிலையம் வந்து இறங்கினார். இதன்பின்னர் நாசிக்கில் உள்ள தங்களது வீட்டுக்கு செல்வதற்காக அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றனர். காரை அவரது கணவர் விஜய் ஓட்டினார்.
இந்தநிலையில் மும்பை-நாசிக் நெடுஞ்சாலையில் தானே மாவட்டம் சாகாப்பூர் அருகே கார் வந்தபோது, திடீரென விஜயின் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது, சாலையோரம் நிறுத்தி இருந்த கியாஸ் டேங்கர் லாரியின் பின்புறம் கண் இமைக்கும் நேரத்தில் கார் பயங்கரமாக மோதியது.
பாடகி பலி
மோதிய வேகத்தில் காரின் முன்புறம் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் பாடகி கீதா மாலி, காரை ஓட்டிவந்த அவரது கணவர் விஜய் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி படு காயமடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த சாகாப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதில், பாடகி கீதா மாலி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அவரை பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது கணவர் விஜய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ரசிகர்கள் துயரம்
இது குறித்து, விதிமுறையை மீறி சாலையோரம் கியாஸ் டேங்கர் லாரியை நிறுத்தியதாக டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பலியான கீதா மாலி கடந்த 6-ந்தேதி நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றதாகவும், அங்கு நடந்த நிகழ்ச்சியினை தனது பேஸ்புக் கணக்கில் பதிவேற்றம் செய்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
கீதா மாலி விபத்தில் பலியான சம்பவம் அறிந்த அவரது ரசிகர்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகி உள்ளனர்.