கொள்ளிடம் அருகே, மரத்தில் கார் மோதியதில் சிதம்பரத்தை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் பலி
கொள்ளிடம் அருகே மரத்தில் கார் மோதியதில் சிதம்பரத்தை தி.மு.க. பிரமுகர் பலியானார். மகளின் திருமண அழைப்பிதழை கொடுத்து விட்டு திரும்பியபோது இந்த பரிதாப சம்பவம் நடந்தது. இந்த விபத்தில் மேலும் ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கொள்ளிடம்,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள வாக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(வயது 50). கீரப்பாளையம் ஒன்றிய தி.மு.க. செயலாளராக இவர் இருந்து வருகிறார். இவர், தனது மகள் திருமணத்திற்காக நாகை மாவட்டம் பூம்புகார் மற்றும் சீர்காழி பகுதிகளில் உள்ள உறவினர்கள், கட்சிகாரர்களுக்கு திருமண அழைப்பிதழ் வைப்பதற்காக காரில் வந்தார். காரை அவரே ஓட்டி வந்தார்.
அங்கு திருமண அழைப்பிதழை கொடுத்து விட்டு நேற்று முன்தினம் நள்ளிரவில் தனது சொந்த ஊரான வாக்கூருக்கு முருகன் திரும்பி சென்றார். அந்த கார், சீர்காழி-சிதம்பரம் நெடுஞ்சாலையில் கொள்ளிடம் அருகே உள்ள புத்தூர் பாலிடெக்னிக் என்னுமிடத்தில் வந்து கொண்டிருந்தபோது, காரின் இடது முன்பக்க டயர் வெடித்தது.
இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் உள்ள புளியமரத்தில் மோதியது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்தில் காரின் முன்பகுதி நொறுங்கியது. காரின் பின்பக்கம் அமர்ந்திருந்த வாக்கூரை சேர்ந்த சக்திவேல் என்பவர் பலத்த காயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு வந்து விபத்தில் பலியான முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் பலியான முருகன், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் நெருங்கிய உறவினர் ஆவார்.