மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம்; டிரைவருக்கு ஆயுள் தண்டனை - தூத்துக்குடி மகிளா கோர்ட்டு தீர்ப்பு
மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மகிளா கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி வடக்கு சோட்டையன் தோப்பு ஹவுசிங் போர்டை சேர்ந்தவர் முத்தையா மகன் பாலமுருகன் (வயது 29), டிரைவர். இவர் 27 வயதான வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி இளம்பெண் ஒருவரை கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் அந்த பெண் கர்ப்பமானார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் பெற்றோர் பாலமுருகனிடம், அதுகுறித்து கேட்டபோது அவர் கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து அந்த பெண்ணின் பெற்றோர் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலமுருகனை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு தூத்துக்குடி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது.
வழக்கை நீதிபதி குமார்சரவணன் விசாரித்து, குற்றம் சாட்டப்பட்ட பாலமுருகனுக்கு மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அதனை செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்ததற்காக 2 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கும்படியும் அவர் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு வக்கீலாக சுபாஷிணி ஆஜரானார்.