ராணிபென்னூரில் அருண்குமார் புஜாராவுக்கு பா.ஜனதா டிக்கெட் ஆர்.சங்கரை எம்.எல்.சி. ஆக்கி மந்திரி பதவி வழங்குவோம் எடியூரப்பா அறிவிப்பு
ஆர்.சங்கரை எம்.எல்.சி. ஆக்கி மந்திரி பதவி வழங்குவோம் என்று எடியூரப்பா அறிவித்தார்.
பெங்களூரு,
ஆர்.சங்கரை எம்.எல்.சி. ஆக்கி மந்திரி பதவி வழங்குவோம் என்று எடியூரப்பா அறிவித்தார்.
கடும் அதிருப்தி
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்களில் 16 பேர் நேற்று முன்தினம் பா.ஜனதாவில் சேர்ந்தனர். அவர்களில் இடைத்தேர்தலில் போட்டியிட 13 பேருக்கு டிக்கெட் வழங்கப்பட்டு உள்ளது. ராணிபென்னூர் மற்றும் சிவாஜிநகர் தொகுதிகளில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு பா.ஜனதா டிக்கெட் மறுத்துள்ளது.
இதனால் ஆர்.சங்கர் மற்றும் ரோஷன்பெய்க் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பாவை பெங்களூருவில் நேற்று ஆர்.சங்கர் நேரில் சந்தித்து பேசினார். அதன் பிறகு எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சொல்லை காப்பாற்றுபவன்
ராணிபென்னூர் தொகுதியில் ஆர்.சங்கருக்கு டிக்கெட் வழங்கினால் வெற்றி பெறுவது கடினம் என்பது தெரியவந்தது. அதனால் அவருக்கு டிக்கெட் வழங்கவில்லை. அவருக்கு பதிலாக அருண்குமார் புஜாரா என்பவருக்கு டிக்கெட் வழங்க முடிவு செய்துள்ளோம். ஆர்.சங்கரை எம்.எல்.சி. ஆக்கி மந்திரி பதவி வழங்குவதாக உறுதி அளித்துள்ளேன். நான் எப்போதும் சொல்லும் சொல்லை காப்பாற்றுபவன். அவருக்கு கொடுத்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றுவேன். அதனால் ராணிபென்னூரில் ஆர்.சங்கர் பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வார்.
சிவாஜிநகர் தொகுதியில் எம்.சரவணாவுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளோம். அந்த தொகுதியில் ரோஷன் பெய்க்குக்கு டிக்கெட் வழங்க முடியாத நிலை உள்ளது. இதுபற்றி அவரிடம் விரிவாக எடுத்து கூறியுள்ளேன். இதற்கு மேல் என்ன முடிவு எடுக்கிறார் என்பது அவர் சார்ந்த விஷயம்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.