ஏரல் அருகே, விவசாயிக்கு கத்திக்குத்து; தந்தை-மகன்கள் உள்பட 4 பேர் கைது

ஏரல் அருகே விவசாயியை கத்தியால் குத்தியதாக தந்தை-மகன்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-11-14 22:00 GMT
ஏரல்,

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே மாரமங்கலம் தீப்பாச்சி சாமிநாதபுரத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து (வயது 50). விவசாயி. இவருடைய மனைவி சாந்தி (45). இவர்களுடைய மகன் பிரேம்குமார் (29). இவர் தனது மனைவியுடன் நேற்று முன்தினம் மதியம் பக்கத்து ஊரான மாரமங்கலம் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அப்போது மாரமங்கலத்தைச் சேர்ந்த பாலகிரு‌‌ஷ்ணன் மகன் சுந்தர் (28) செருப்பால் பிரேம்குமாரை தாக்க வந்தார். உடனே பிரேம்குமார் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று விட்டார். இதுகுறித்து பிரேம்குமார் தனது குடும்பத்தினரிடமும், ஊர் பிரமுகர்களிடமும் தெரிவித்தார். இதையடுத்து சுந்தரை ஊர் பிரமுகர்கள் கண்டித்தனர்.

இந்த நிலையில் மாலையில் மாரமங்கலம் விவசாய சங்கம் முன்பு பிரேம்குமார், அவருடைய தந்தை காளிமுத்து, தாயார் சாந்தி ஆகிய 3 பேரும் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சுந்தர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் உள்ளிட்டவர்கள் கம்பு, கத்தியால் பிரேம்குமாரையும், அவருடைய பெற்றோரையும் தாக்கினர். இதில் காளிமுத்துவுக்கு மார்பில் கத்திக்குத்து விழுந்தது. பிரேம்குமார், சாந்தி ஆகியோரும் படுகாயம் அடைந்தனர்.

உடனே அவர்கள் 3 பேரையும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பலத்த காயம் அடைந்த காளிமுத்துவை மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில், ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரகுராஜன் வழக்குப்பதிவு செய்து, சுந்தர், அவருடைய அண்ணன் பாக்கியராஜ் (32), தந்தை பாலகிரு‌‌ஷ்ணன் (65), உறவினரான சுப்பையா மகன் சின்னத்துரை (29) ஆகிய 4 பேரையும் கைது செய்தார்.

மேலும் தலைமறைவான சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்