ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - அமைச்சர் ஷாஜகான் அறிவுறுத்தல்
ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அமைச்சர் ஷாஜகான் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
புதுச்சேரி,
புதுவை லாஸ்பேட்டை தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள சட்டப்பணிகள் ஆணையத்தின் சட்ட உதவி மையம் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி ஓட்டுனர் உரிமம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு புதுச்சேரி சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலர் ஷோபனா தேவி தலைமை தாங்கினார். போக்குவரத்துதுறை ஆணையர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் ஷாஜகான் கலந்துகொண்டு 50 மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி ஓட்டுனர் உரிமம் மற்றும் போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு கையேடுகளை வழங்கினார்.
அதைத்தொடர்ந்து அமைச்சர் ஷாஜகான் பேசியதாவது:-
புதுச்சேரியில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என புதுவை அரசு உத்தரவிட்டது. அதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டது. இருசக்கர வாகன விபத்தில் சிக்குபவர்கள் 98 சதவீதம் ஹெல்மெட் அணியாத காரணத்தால் தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழக்கிறார்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
புதுவையில் போக்குவரத்து விதிகளை யாரும் கடைபிடிப்பதில்லை. மக்கள் பொறுப்புடன் நடந்துகொள்வதில்லை. வாகனங்கள் உரிய இடத்தில் நிறுத்தப்படுவதில்லை. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே மாணவர்கள் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து நண்பர்கள், உறவினர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். மாணவர் களால் தான் மாற்றத்தை உருவாக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக கல்லூரியின் முதல்வர் சசிகாந்ததாஸ் வரவேற்றார். இதற்கான ஏற்பாட்டினை சட்ட உதவி மைய தலைவரும், பேராசிரியருமான நல்லசாமி, வக்கீல் குலோத்துங்கன் ஆகியோர் செய்திருந்தனர். இதில் மாணவ-மாணவிகள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.