ரூ.73 லட்சத்துடன் தப்பிய வேன் டிரைவர் கைது சில மணி நேரத்தில் போலீசார் மடக்கினர்
பிரபல தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.73 லட்சத்துடன் தப்பிஓடிய வேன் டிரைவரை போலீசார் சில மணி நேரத்தில் கண்டுபிடித்து கைது செய்தனர்.
மும்பை,
பிரபல தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.73 லட்சத்துடன் தப்பிஓடிய வேன் டிரைவரை போலீசார் சில மணி நேரத்தில் கண்டுபிடித்து கைது செய்தனர்.
பண வசூல் வேன்
மும்பை காட்கோபர் பகுதியை சேர்ந்தவர் ஷெர் அலிகான் (வயது55). இவர் பிரபல நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் நிறுவனத்தின் பண வசூலுக்கு செல்லும் வேனை ஓட்டிச்சென்றார். வேனில் டிரைவருடன் பணவசூல் ஊழியர் ராகுல் மற்றும் காவலாளி இருந்தனர். இவர்கள் 3 பேரும் நிறுவனத்திற்கு வரவேண்டிய ரூ.73 லட்சத்தை நிறுவனங்களிடம் இருந்து வசூலித்தனர்.
இந்தநிலையில் பகல் 12.30 மணியளவில் மலாடு லிங்ரோடு, மித் சவுக்கி பகுதியில் ராகுல் மேலும் ஒரு நிறுவனத்திற்கு பணம் வசூல் செய்ய சென்றார்.
இந்தநிலையில் ஷெர் அலிகான் மிகவும் பசிப்பதாகவும், ஏதாவது சாப்பிட வாங்கிவருமாறு காவலாளியிடம் கூறினார். இதையடுத்து காவலாளி அவருக்கு சாப்பாடு வாங்க வேனை சாலையோரம் நிறுத்திவிட்டு வெளியே சென்றார்.
ரூ.73 லட்சத்துடன் மாயம்
இந்தநிலையில் அவர் சாப்பாடு வாங்கிவிட்டு வந்து பார்த்தபோது, ஷெர் அலிகான் வேனுடன் மாயமாகி இருந்தார். செல்போனில் தொடர்புகொண்ட போதும் அவர் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் ரூ.73 லட்சத்தை கொள்ளையடித்துவிட்டு, டிரைவர் வேனுடன் தப்பிஓடியதை உணர்ந்த காவலாளி சம்பவம் குறித்து நிறுவனத்துக்கு தகவல் கொடுத்தார். பின்னர் இது குறித்து பாங்குர்நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து ஷெர் அலிகானை தேடினர்.
வேன் டிரைவர் கைது
இதில், பணத்துடன் மாயமான சில மணி நேரங்களில் ஷெர் அலிகானை காந்திவிலி பகுதியில் வைத்து போலீசாா் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.73 லட்சத்தையும் மீட்டனர். இதற்கிடையே அவர் கொடுத்த தகவலின் பேரில் தகிசர் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த நிறுவன வேனையும் போலீசார் மீட்டனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைதான வேன் டிரைவர் ஷெர் அலிகானிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.