ஆட்சி அமைக்க சிவசேனா மீண்டும் தீவிரம் காங். தலைவர்களுடன் உத்தவ் தாக்கரே பேச்சு மும்பை ஓட்டலில் 1 மணி நேரம் ஆலோசனை
மராட்டியத்தில் ஆட்சி அமைக்க சிவசேனா மீண்டும் தீவிரம் காட்டி உள்ளது. இது தொடர்பாக மும்பை ஓட்டலில் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்த உத்தவ் தாக்கரே அவர்களுடன் 1 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மும்பை, நவ.14-
மராட்டிய சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி கட்சிகளால் ஆட்சி அமைக்க முடியவில்லை. முதல்-மந்திரி பதவியில் சிவசேனா பங்கு கேட்டதால் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த நிலை ஏற்பட்டது.
ஜனாதிபதி ஆட்சி
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் முயற்சியில் களம் இறங்கிய சிவசேனாவின் கனவும் தகர்ந்தது. ஆட்சி அமைப்பதற்கு 3 நாள் அவகாசம் கேட்ட அக்கட்சியின் கோரிக்கையை நிராகரித்த கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி 3-வது பெரிய கட்சியான சரத்பவாரின் தேசியவாத காங்கிரசுக்கு அழைப்பு விடுத்தார்.
உரிய நேரத்தில் யாரும் ஆட்சியமைக்க முன்வராததால் நேற்று முன்தினம் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
உத்தவ் தாக்கரே கருத்து
ஆட்சி அமைக்க கவர்னர் தங்களுக்கு 3 நாள் அவகாசம் வழங்காமல் போனாலும், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதன் மூலம் புதிய அரசை அமைக்க சிவசேனாவுக்கு 6 மாதங்கள் அவகாசம் கிடைத்து இருப்பதாக அக்கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கருத்து தெரிவித்தார். குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைப்போம் என்றும் அவர் உறுதிபட கூறினார்.
ஜனாதிபதி ஆட்சி அமலாவதற்கு முன், ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை போனிலும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை நேரிலும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சந்தித்து பேசி ஆதரவை கோரியிருந்தார்.
சந்திப்பு
காங்கிரஸ் தலைவர்கள் யாரையும் நேரில் சந்தித்து பேசாத நிலையில், நேற்று திடீரென அவர் மும்பை புறநகர் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் மாநில காங்கிரஸ் தலைவர் பாலசாகேப் தோரட், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அசோக் சவான், மாணிக்ராவ் தாக்கரே ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.
பின்னர் நிருபர்களை சந்தித்த உத்தவ் தாக்கரே, “எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கிறது. பேச்சுவார்த்தைகள் சரியான திசையில் நடந்து கொண்டிருக்கின்றன. சரியான நேரத்தில் இதுபற்றி அறிவிப்போம்” என்றார்.
முதல்-மந்திரி பதவியில் பங்கு
சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் இணைந்து ஆட்சி அமையும் பட்சத்தில், அந்த கட்சிகள் இடையே அதிகாரப்பகிர்வு குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி சிவசேனாவும், தேசியவாத காங்கிரசும் சுழற்சி முறையில் தலா 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வது, காங்கிரசுக்கு துணை முதல்-மந்திரி பதவி மற்றும் சபாநாயகர் பதவி வழங்குவது என முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட அடுத்த நாளே ஆட்சியமைக்கும் முயற்சியில் சிவசேனா இறங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் தலைவர்களுடன் உத்தவ் தாக்கரே பேசிய பின்னர், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் முன்னாள் முதல்-மந்திரி சுஷில்குமார் ஷிண்டே தலைமையில் நடந்தது.
பாரதீய ஜனதாவால் பரபரப்பு
இதற்கிடையே 145 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்துடன் கவர்னரை சந்தித்து, பாரதீய ஜனதா ஆட்சி அமைக்கும் என்று அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நாராயண் ரானே கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் தங்களது எம்.எல்.ஏ.க்கள் பாரதீய ஜனதாவின் குதிரை பேரத்தில் சிக்கி விடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருப்பதாக காங்கிரஸ் முன்னாள் முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான் தெரிவித்தார்.