கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்டு உடல் சேலம் கொண்டு வரப்பட்டது
கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்டு மணிவாசகம் உடல் சேலம் கொண்டு வரப்பட்டது.
சேலம்,
ஓமலூரை அடுத்த தீவட்டிப்பட்டி அருகே உள்ள ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் மணிவாசகம் (வயது 60). இவர் மாவோயிஸ்டு ஆவார். பல ஆண்டுகளுக்கு முன்பு தர்மபுரியில் சுட்டுக்கொல்லப்பட்ட நக்சலைட்டு தீவிரவாதி பாலன் என்பவரின் நெருங்கிய நண்பராக இருந்தார். 2012-ம் ஆண்டு ஆயுத பயிற்சியில் ஈடுபட்ட போது கியூ பிரிவு போலீசார் மணிவாசகத்தை கைது செய்தனர். இதில் ஜாமீனில் வெளியில் வந்த அவர் அதன்பிறகு தலைமறைவாகி விட்டார்.
மணிவாசகத்தை கேரள போலீசார் கடந்த மாதம் 28-ந்தேதி சுட்டுக்கொன்றனர். திருச்சூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்த மணிவாசகத்தின் உடல் கோர்ட்டு உத்தரவுப்படி கேரள போலீசார் நேற்று மணிவாசகத்தின் தங்கை லட்சுமியிடம் ஒப்படைத்தனர். மணிவாசகம் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்யும் வரை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பாதுகாப்பாக வைக்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டது. இதையொட்டி மணிவாசகம் உடல் ஆம்புலன்ஸ் மூலம் நேற்று இரவு சேலம் கொண்டு வரப்பட்டது. பின்னர் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டது.
மணிவாசகம் உடல் கொண்டு வரப்படும் தகவல் பரவியதையொட்டி அவரது ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் திரண்டனர். பின்னர் அவரது உடல் கொண்டு வந்த ஆம்புலன்சை பார்த்ததும் மாவோயிஸ்டு தியாகிக்கு வீர வணக்கம் என்று கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் மணிவாசகத்தின் தங்கை லட்சுமி, அவரது கணவர் சாலிவாகணன் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
கோர்ட்டு உத்தரவிட்டும், மணிவாசகத்தின் உடலை மிகவும் தாமதமாகத்தான் தந்தார்கள். சரண் அடையத்தான் மணிவாசகம் சென்றார். ஆனால் அவரை என்கவுண்ட்டர் என்ற பெயரில் சுட்டுக்கொன்று கேரள அரசு துரோகம் செய்து விட்டது. எதற்காக சுட்டுக்கொல்லப்பட்டார்? என்று வழக்கு தொடர்வதற்காக பிரேத பரிசோதனை அறிக்கை வழங்கும்படி கேட்டோம். ஆனால் கேரள அரசு அதையும் கொடுக்க மறுத்து விட்டது.
திருச்சி சிறையில் உள்ள மணிவாசகத்தின் மனைவி கலா, மற்றொரு தங்கை சந்திரா ஆகியோர் பரோலில் வருகிறார்கள். அவர்கள் வந்த பிறகு மணிவாசகம் உடலை சொந்த ஊரில் நாளை (இன்று) அடக்கம் செய்ய உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர். முன்னதாக அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று இரவு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. திருச்சி சிறையில் உள்ள கலா, சந்திரா ஆகிய 2 பேரும் மாவோயிஸ்டுகள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.