நாகர்கோவிலில் பரபரப்பு, தனியார் ஆஸ்பத்திரியில் ஏ.சி. எந்திரம் வெடித்து சிதறியது

நாகர்கோவிலில் தனியார் ஆஸ்பத்திரியில் ஏ.சி.எந்திரம் வெடித்து சிதறியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-11-13 22:30 GMT
நாகர்கோவில், 

நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் தனியார்ஆஸ்பத்திரி ஒன்று உள்ளது. நேற்று மாலை இந்த ஆஸ்பத்திரியில் ஒரு அறையில் இருந்து பயங்கர சத்தத்துடன் கரும்புகை வெளியேறியது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள், கரும்புகை வந்த அறையை நோக்கி ஓடினர். அந்த அறை முழுவதும் மளமளவென தீ பற்றி எரிந்தது.

இதுபற்றி நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அதிகாரி துரை தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் அங்கிருந்து ஏராளமான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின.

தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ½ மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு தீ முழுமையாக அணைக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் பற்றி கேட்டபோது, நேற்று மாலை ஆஸ்பத்திரியின் ஒவ்வொரு அறையிலும் ஏ.சி. போடப்பட்டது. அப்போது மின்தடை ஏற்பட்டு இருந்தது.

மாலை 5 மணி அளவில் மின்சாரம் வந்ததும், ஒரு அறையில் உள்ள ஏ.சி. எந்திரத்தில் மின்கசிவு ஏற்பட்டு வெடித்து சிதறியதாக தெரிகிறது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஏ.சி.எந்திரம் வெடித்து சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்