திண்டிவனம் அருகே, ரகசிய அறையில் 1000 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தவர் கைது

திண்டிவனம் அருகே ரகசிய அறையில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-11-13 22:00 GMT
திண்டிவனம்,

திண்டிவனம் அடுத்த ஆத்தூர் கிராம எல்லையில் புதுச்சேரி மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி, பிரம்மதேசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலை செல்வி, மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிரு‌‌ஷ்ணன், பிரம்மதேசம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் ஆத்தூருக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது அங்குள்ள மூர்த்தி என்பவருடைய வீட்டின் பூஜை அறை மற்றும் சமையல் அறையில் ரகசிய அறைகள் அமைக்கப்பட்டு புதுச்சேரி மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மதுபாட்டில்களை எண்டியூர் கிராமத்தை சேர்ந்த குப்பன் (52)என்பவர் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து ரகசிய அறைகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1,000 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக குப்பனை பிடித்து திண்டிவனம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து குப்பனை கைது செய்தனர். மேலும் அவரது மைத்துனரான ஆத்தூரை சேர்ந்த மூர்த்தியை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்