முதலீட்டாளர்களிடம் கோடிக்கணக்கில் பணமோசடி: தலைமறைவான நகைக்கடை உரிமையாளர்கள் 2 பேர் கைது 42 கிலோ தங்கம் பறிமுதல்

முதலீட்டாளர்களிடம் கோடிக்கணக்கில் பணமோசடி செய்துவிட்டு, தலைமறைவான நகைக்கடை உரிமையாளர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-11-12 23:00 GMT
மும்பை, 

முதலீட்டாளர்களிடம் கோடிக்கணக்கில் பணமோசடி செய்துவிட்டு, தலைமறைவான நகைக்கடை உரிமையாளர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 42 கிலோ தங்கநகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தலைமறைவு

மும்பை காட்கோபர் பகுதியில் ரசிக்லால் ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடை செயல்பட்டு வந்தது. இந்த நகைக்கடையில் நடத்தப்பட்ட தங்கநகை சேமிப்பு திட்டத்தில் ஏராளமான வாடிக்கையாளர்கள் லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்திருந்தனர். இந்தநிலையில் ரசிக்லால் ஜூவல்லர்ஸ் திடீரென இழுத்து மூடப்பட்டது. இதனால் அந்த நகைக்கடையில் மூதலீடு செய்திருந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் கடை உரிமையாளர்களான ஜேயேஷ் ரசிக்லால்(வயது55), நிலேஷ் ரசிக்லால்(53) ஆகியோரை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அவர்கள் தலைமறைவானது தெரியவந்தது.

இதனால் பதறிப்போன வாடிக்கையாளர்கள் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர்.

2 பேர் கைது

இந்த புகாரின்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நகைக்கடையில் வாடிக்கையாளர்கள் கோடிக்கணக்கிலான பணத்தை முதலீடு செய்து இருந்ததும், அந்த பணத்தை மோசடி செய்துவிட்டு உரிமையாளர்கள் இருவரும் தலைமறைவானதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான நகைக்கடை உரிமையாளர்கள் இருவரையும் வலைவீசி தேடிவந்தனர்.

இந்தநிலையில் தலைமறைவாக இருந்த நகைக்கடை உரிமையாளர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 42 கிலோ எடையுள்ள தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் கைதான இருவரையும் போலீசார் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்