கடையம் அருகே, தோட்டத்தில் காட்டு யானைகள் அட்டகாசம் - 30 தென்னை மரங்களை பிடுங்கி எறிந்து நாசம் செய்தன
கடையம் அருகே கருத்தபிள்ளையூரில் உள்ள தோட்டத்தில் காட்டு யானைகள் புகுந்து 30 தென்னை மரங்களை பிடுங்கி எறிந்து நாசம் செய்தன. இதனால் விவசாயிகள் பீதியில் உள்ளனர்.
கடையம்,
நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள கருத்தப்பிள்ளையூரை சேர்ந்தவர் வின்சென்ட் (வயது 56), விவசாயி. இவருக்கு மேற்கு தொடர்ச்சி அடிவாரத்தில் 10 ஏக்கரில் தோட்டம் உள்ளது. அதில் தென்னை, மா பயிரிட்டுள்ளார்.
இந்தநிலையில் நேற்று காலை தோட்டத்திற்கு சென்ற வின்சென்ட், அங்கு தென்னை மரங்கள் வேரோடு பிடுங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இவரது தோட்டத்தில் யானைகள் புகுந்து 30 தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்துள்ளது. மேலும் தென்னைகுருத்துக்களை சாப்பிட்டு உள்ளது. இதனால் விவசாயி கள் பீதி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து கடையம் வனச்சரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் கடையம் வனச்சரகர் நெல்லை நாயகம் தலைமையில் வனத்துறையினர் சென்று பார்வையிட்டனர்.
இதுபற்றி விவசாயி வின்சென்ட் கூறுகையில், கடந்த 30 வருடங்களாக கஷ்டப்பட்டு இந்த தென்னைகளை வளர்த்து வந்தேன். நன்கு காய் காய்த்து கொடுத்து வந்த நிலையில் காட்டு யானைகள் புகுந்து நாசம் செய்தது வேதனையளிக்கிறது. சுமார் ரூ.5 லட்சம் செலவில் சேதமடைந்துள்ளது. இதற்கு தகுந்த நிவாரணத்தை அரசு வழங்க வேண்டும்.
மேலும் இதுபோல் யானைகள் மீண்டும் நுழையாமல் இருக்க மின்வேலி அமைத்து, அகழிகளை பராமரிக்க வேண்டும் என்றார்.