தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: ஒருநபர் விசாரணை ஆணையத்தில் சமூக ஆர்வலர் முகிலன் ஆஜர் - திருச்சி சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டார்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் விசாரணை ஆணையத்தில் சமூக ஆர்வலர் முகிலன் நேற்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

Update: 2019-11-12 23:00 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு, தடியடியில் 13 பேர் பலியானார்கள். இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது.

இந்த ஆணையம் மாதம்தோறும் தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஏற்கனவே 15 கட்ட விசாரணை நடத்தப்பட்டு, 386 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

நேற்று 16-வது கட்ட விசாரணை தூத்துக்குடி அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் நீதிபதி அருணாஜெகதீசன் தலைமையில் தொடங்கியது. இதில் ஆஜராக சமூக ஆர்வலர் முகிலன், பத்திரிகையாளர்கள் உள்பட 29 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. நேற்று மட்டும் முகிலன் உள்பட 5 பேர் ஆஜராக சம்மன் வழங்கப்பட்டு இருந்தது. இதனால் திருச்சி சிறையில் இருந்து முகிலன் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். மதியம் 12 மணி முதல் மாலை வரை அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் வாக்குமூலம் அளித்தார்.

மாலை 4.40 மணிக்கு முகிலன் விசாரணை முடிந்து வெளியே வந்தார். அப்போது அவர், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஆர்.எஸ்.எஸ். பின்புலம் உள்ளது என்று ராகுல்காந்தி கூறி உள்ளார். எனவே, அவரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று கோஷம் எழுப்பியபடி சென்றார்.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று மொத்தம் 4 பேர் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். அந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. வருகிற 16-ந்தேதி வரை தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

மேலும் செய்திகள்