கோவை அருகே, கைதான மாவோயிஸ்டு தலைவன் தீபக் மீது உபா சட்டம் பாய்ந்தது

கோவை அருகே கைதான மாவோயிஸ்டு தலைவன் தீபக் மீது உபா சட்டம் பாய்ந்தது. மேலும் அவரை வருகிற 22-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

Update: 2019-11-11 22:30 GMT
கோவை,

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மஞ்சகண்டி வனத்தில் கடந்த மாதம் 28-ந் தேதி கேரள மாநில ‘தண்டர்போல்ட்’ போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில், 4 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இதில் மாவோயிஸ்டு ஆயுத பயிற்சியாளரும், தலைவருமான சத்தீஸ்கரை சேர்ந்த தீபக் (வயது 32) உள்பட 3 பேர் குண்டு காயங்களுடன் தப்பினர்.

இவர்கள் தமிழக எல்லையான கோவை, நீலகிரி பகுதிகளில் தஞ்சமடைந்திருக்கலாம் என்ற தகவலின் அடிப்படையில், தமிழக நக்சல் தடுப்பு பிரிவு, அதிரடிப்படையினர் ஆனைகட்டி, பில்லூர், சிறுவாணி பகுதிகளில், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

கடந்த 9-ந் தேதி கோவை அருகே ஆனைகட்டி, மூலக்கங்கன் வனத்தில் அதிரடிப்படையினர் நடத்திய தேடுதலில், துப்பாக்கி சூட்டில் காயத்துடன் தப்பிய தீபக் கைது செய்யப்பட்டார். பெண் மாவோயிஸ்டுகள் 2 தப்பினர். தீபக்கிடம் இருந்து துப்பாக்கி, தோட்டாக்கள், ஜெலட்டின் மற்றும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் தீபக் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டார்.

அங்கு அவரது காலில் ஏற்பட்ட காயத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் 2 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் ஜான் சின்னதடாகம் போலீஸ் நிலையத்தில் மாவோயிஸ்டு தீபக் குறித்து புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் மாவோயிஸ்டு தீபக் மீது தேச துரோகம், பயங்கரவாத செயல்களுக்கு உதவுதல், துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு வைத்திருந்தல் உள்பட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தவிர உபா சட்டமும் (சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டம்) அவர் மீது பதிவு செய்யப்பட்டது.

தீபக் காயம் அடைந்து உள்ளதால் பாதுகாப்பை கருதி கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லவில்லை. அதற்கு பதில் மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் நேற்ற முன்தினம் அதிகாலையில் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவர் முன்பு தீபக் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, தீபக்கை வருகிற 22-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து தீபக் சிறை கைதிகள் சிகிச்சை பெறும் வார்டுக்கு மாற்றப்பட்டார். 

மேலும் செய்திகள்