பள்ளிகொண்டா அருகே, முதியவரை கொன்று பணம் திருடிய வாலிபருக்கு ஆயுள் தண்டனை வேலூர் கோர்ட்டு தீர்ப்பு

பள்ளிகொண்டா அருகே முதியவரை கொன்று பணம் திருடிய வாலிபருக்கு வேலூர் கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2019-11-11 22:30 GMT
வேலூர், 

வேலூரை அடுத்த பள்ளிகொண்டா அருகே உள்ள வெட்டுவாணம் கிராமத்தை சேர்ந்தவர் காசிநாதன் (வயது 64), விவசாயி. மேலும் அவர் வெட்டுவாணம் மற்றும் பள்ளிகொண்டா பகுதிகளில் வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார்.

பள்ளிகொண்டா அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் மகன் நந்தா என்ற முத்துக்குமார் (24). இவர், காசிநாதன் வட்டிக்கு பணம் கொடுப்பதால் அவரிடம் நகை, பணம் இருக்கும் என்று நினைத்து அதை கொள்ளையடிக்க திட்டமிட்டார்.

கடந்த 28.5.2018 அன்று காசிநாதன் தனது நிலத்தில் இருந்தார். அப்போது அங்கு சென்ற முத்துக்குமார் திடீரென காசிநாதனின் தலையில் கல்லால் தாக்கினார். இதில் காசிநாதன் சம்பவ இடத்திலேயே மயங்கிவிழுந்து இறந்துவிட்டார்.

உடனே அவருடைய சட்டை பாக்கெட்டில் இருந்த 1000 ரூபாய் மற்றும் செல்போன் ஆகியவற்றை திருடிக்கொண்டு முத்துக்குமார் அங்கிருந்து சென்றுவிட்டார். இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் காசிநாதனை கொலை செய்தது முத்துக்குமார் என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை வேலூர் கூடுதல் மாவட்ட விரைவு கோர்ட்டில் நடைபெற்றது.

நீதிபதி எஸ்.குணசேகர் வழக்கை விசாரித்தார். அரசு சார்பில் வழக்கறிஞர் அண்ணாமலை ஆஜரானார். வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், காசிநாதனை கொலை செய்த குற்றத்திற்காக நந்தா என்ற முத்துக்குமாருக்கு ஆயுள் தண்டனையும், நிலத்திற்குள் அத்துமீறி நுழைந்ததற்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், பணத்தை திருடிய குற்றத்திற்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், 3 பிரிவுக்கும் தலா ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி எஸ்.குணசேகர் தீர்ப்பு கூறினார். இந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கவும் அவர் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்