மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் உயர்மின் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் உயர்மின் அழுத்த கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை, போலீஸ்காரர் ஒருவர் சாமர்த்தியமாக பேசி கீழே இறங்கி வரும்படி செய்தார்.
பூந்தமல்லி,
சென்னை போரூர் ஏரியில் உள்ள உயர் அழுத்த மின்கோபுரத்தில் நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் திடீரென ஏறினார். சுமார் 30 அடி உயரத்தில் ஏறி நின்ற அவர், அங்கிருந்தபடி தான் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி பொதுமக்கள், இதுபற்றி போரூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மின்கோபுரத்தில் நின்றபடி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரிடம், கீழே இறங்கி வருமாறு கூறினர். ஆனால் அவர் இறங்கி வர மறுத்தார்.
அப்போது நுண்ணறிவு பிரிவு போலீஸ்காரர் டார்வின், “இது போன்ற ஒரு விபத்தில்தான் எனது தம்பியை நான் பறிகொடுத்து விட்டேன். எந்த பிரச்சினையாக இருந்தாலும் கீழே இறங்கி வா, நாம் பேசி தீர்த்துக்கொள்ளலாம்” என சாமர்த்தியமாக அந்த வாலிபரிடம் பேச்சுக்கொடுத்தார்.
நீணடநேரத்துக்கு பிறகு தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரின் மனதை மாற்றி, லாவகமாக அவரை கீழே இறங்கி வரும்படி செய்தார்.
பின்னர் நடத்திய விசாரணையில் அவர், போரூர் சிவன் கோவில் தெருவைச்சேர்ந்த பாண்டி என்ற செல்லப்பாண்டி(வயது 32), என்பதும், வெல்டிங் வேலை செய்து வருவதும் தெரிந்தது. அவருக்கு யோகேஸ்வரி என்ற மனைவியும், 7 வயதில் ஒரு மகனும், 10 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
பாண்டிக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று அதிகாலை கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் பாண்டி, குடிபோதையில் போரூர் ஏரியில் உள்ள மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது தெரிந்தது.
அவருக்கு அறிவுரை வழங்கிய போலீசார், அவரது மனைவியுடன் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை, சாதுர்யமாக பேசி கீழே இறங்கிவர செய்த போலீஸ்காரர் டார்வினை அங்கிருந்த பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.