பேரையூர் தாலுகாவில் பருத்தி கொள்முதல் மையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை
பேரையூர் தாலுகாவில் அதிகமாக விளையும் பருத்திக்கு, பருத்தி கொள்முதல் மையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பேரையூர்,
பேரையூர் தாலுகா வானம் பார்த்த பூமியாகும். இங்கு பருவமழை பெய்தால் மட்டுமே முதல்கட்ட மானாவாரி விவசாயம் நடைபெறும். நன்றாக மழை பெய்து கண்மாய் நிரம்பினால் மட்டுமே நெல் சாகுபடி நடைபெறும். தற்போது மானாவாரிக்கு தேவையான மழை மட்டுமே பெய்து உள்ளது. அதனால் மானாவாரி விவசாயத்தில் பருத்தி பிரதானமாக தற்போது சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. மாவட்டத்திலேயே அதிகமாக பருத்தி சாகுபடி செய்யும் தாலுகாவாக பேரையூர் பகுதி உள்ளது. இந்த பகுதிகளில் தான் மிக நீண்ட இழுவை திறன் கொண்ட பருத்தி விளையும். அதனால் தான் ஆவணி முதல் பங்குனி மாதம் வரை பருத்தி விவசாயம் நடைபெறும். இப்பகுதி கிராம மக்களின் வாழ்வாதாரமே பருத்தி சாகுபடிதான். தற்போது மானாவாரி மற்றும் கிணற்று பாசனத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 20 நாட்களில் அறுவடை பருவத்திற்கு வந்துவிடும். ஆனால் விவசாயிகள் அறுவடை செய்யும் பருத்தியை தங்கள் அருகில் உள்ள வியாபாரிகளிடமே அன்றைய தினம் விற்கும் விலைக்கு விற்று வருகின்றனர். அரசு பருத்தி கொள்முதல் மையம் இருந்தால் விவசாயிகள் பருத்தியை நல்ல விலைக்கு விற்பார்கள்.
பேரையூர் தாலுகாவில் அரசு பருத்தி கொள்முதல் மையம் அமைக்க வேண்டும் என்று பலமுறை விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதுகுறித்து பெருங்காமநல்லூர் விவசாயி காசி மாயன், தாடையம்பட்டி பால்ராஜ் கூறியதாவது:-
பேரையூர் தாலுகாவில் உள்ள பெரும்பான்மையான கிராம மக்களின் பொருளாதாரமே பருத்தி விவசாயம் ஆகும். தற்போது அறுவடை செய்ய உள்ள பருத்தியை இந்த பகுதியில் உள்ள வியாபாரிகளிடமே விற்க கூடிய நிலை உள்ளது. பருத்தி எடுக்கும் செலவு பெரும்பகுதி விவசாய கூலி தொழிலாளர்களுக்கே போய்விடுகிறது. அசல் மற்றும் லாபம் கிடைக்க வேண்டுமானால் அரசு பருத்தி கொள்முதல் மையம் இப்பகுதியில் அமைய வேண்டும். ஒரு கிலோவுக்கு குறைந்தபட்சம் ரூ.45 வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.