மானாமதுரை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி

மானாமதுரை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர்.

Update: 2019-11-07 22:15 GMT
மானாமதுரை, 

மானாமதுரை நகரைச்சுற்றிலும் 39 ஊராட்சிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக் கிராம மக்கள் பலரும் சிகிச்சைக்காக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். இதுதவிர நான்கு வழிச்சாலையில் விபத்து போன்ற சமயங்களில் காயமடைந்தவர்களை முதலுதவி சிகிச்சைக்காக மானாமதுரை அரசு மருத்துவமனைக்குதான் கொண்டு வருகின்றனர். இந்த மருத்துவமனையில் 200-க்கும் மேற்பட்ட புறநோயாளிகளும் 30-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். தற்போது மழையால் காய்ச்சல், இருமல், சளி போன்ற நோய் தொற்றுகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.

14 டாக்டர்கள் இருக்க வேண்டிய அரசு மருத்துவமனையில் 4 டாக்டர்கள் மட்டுமே இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இவர்கள் காலை 9 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை 500-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்து கிடக்க வேண்டியுள்ளது. மருத்துவமனை வளாகம் முழுவதும் குப்பைகளால் நிரம்பியுள்ளது. மழை காலங்களில் மருத்துவமனை வளாகம் முழுவதும் மழை நீர் மற்றும் சாக்கடை நீரால் நிரம்பி சுகாதார கேட்டை ஏற்படுத்தி வருகிறது. துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக கழிப்பறைகள் உள்ளிட்டவைகள் பயன்படுத்த முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே மானாமதுரை அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்றும், பணி நேரத்தில் இல்லாத மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகள்