தற்காலிக கடைகள் அமைக்க தாமதம்: காமராஜர் மார்க்கெட் இடமாற்ற காலஅவகாசம் நீட்டிப்பு

தற்காலிக கடைகள் அமைக்க தாமதம் ஆவதால் காமராஜர் மார்க்கெட் இடமாற்றம் செய்ய காலஅவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-11-07 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.904 கோடி செலவில் 12 விதமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் பஸ் நிலையங்கள், பூங்காக்கள் மேம்பாடு, குடிநீர் அபிவிருத்தி பணிகள், சாலை அமைக்கும் பணிகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக தஞ்சையில் உள்ள பழமை வாய்ந்த காமராஜர் மார்க்கெட் மற்றும் சரபோஜி மார்க்கெட் புதிதாக கட்டப்படுகிறது. இதில் காமராஜர் மார்க்கெட்டில் பெரிய கடைகள் 93-ம், சில்லறை விற்பனை கடைகள் 212-ம் உள்ளன. இதுபோக தரைக்கடைகளும் உள்ளன.

புதிய கடைகள்

இந்த மார்க்கெட்டில் உள்ள கடைகள் எல்லாம் இடிக்கப்பட்டு ரூ.17 கோடியே 47 லட்சம் செலவில் 17,225 சதுரஅடி பரப்பளவில் புதிய கடைகள் கட்டப்பட உள்ளன. மேலும் வாகன நிறுத்துமிடம், குடிநீர் வசதி, கழிப்பறை, ஏ.டி.எம். மையம் போன்ற வசதிகளுடன் கட்டப்படும் புதிய மார்க்கெட்டில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட உள்ளன.

பணிகள் முடியும் வரை தஞ்சை காவேரி நகரில் உள்ள எஸ்.பி.சி.ஏ. திடலில் தற்காலிக கடைகள் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி தற்காலிக கடைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

காமராஜர் மார்க்கெட் 7-ந் தேதி(நேற்று) அடைக்கப்பட்டு இங்குள்ள கடைகள் எல்லாம் காவேரிநகருக்கு மாற்றப்படும். அங்கு இன்று(வெள்ளிக்கிழமை) முதல் தற்காலிக மார்க்கெட் செயல்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்காலிக கடைகள் அமைக்கும் பணி இன்னும் முடிவடையவில்லை. தாமதம் ஆவதால் காமராஜர் மார்க்கெட்டில் உள்ள கடைகளை மாற்ற முடியவில்லை. இதனால் காலஅவகாசம் வழங்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்.

காலஅவகாசம்

அதை ஏற்று தற்காலிக கடைகள் அமைக்கப்படும் வரை காமராஜர் மார்க்கெட்டில் கடைகள் வழக்கம் போல் செயல்பட மாநகராட்சி அதிகாரிகள் காலஅவகாசம் அளித்துள்ளனர். இதனால் நேற்று வழக்கம்போல் காமராஜர் மார்க்கெட் செயல்பட்டது. 2 வாரத்துக்குள் அங்கு தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுவிடும், பின்னர் அங்கு செல்லுமாறு மாநகராட்சி அதிகாரிகள் வாய்மொழியாக கூறியதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்