தாராபுரத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாய தொழிலாளர்கள்
தாராபுரத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு சப்-கலெக்டர் அலுவலகத்தை விவசாய தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.
தாராபுரம்,
தாராபுரம் பகுதியில் விவசாய தொழிலாளர்கள் பலர் குடியிருக்க வீடு இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். சிலருக்கு நிலசீர்திருத்த துறையின் மூலம், உபரி நிலம் வழங்கப்பட்டது. அந்த நிலத்தை பயனாளிகளுக்கு அதிகாரிகள் அளந்து ஒப்படைக்கவில்லை. இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து நேற்று தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில், 100-க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள், மாவட்ட தலைவர் ரகுபதி தலைமையில், வீட்டுமனை பட்டா மற்றும் உபரி நிலம் கேட்டு சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து ரகுபதி கூறியதாவது:-
தாராபுரம் தாலுகாவில் குறிப்பாக மணக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் விவசாய தொழிலாளர்களுக்கு குடியிருக்க வீடுகள் இல்லை. இதனால் ஏழை தொழிலாளர்கள் பலர் சிறிய குடிசைகளில் கூட்டுக்குடும்பங்களாக வாழ்ந்து வருகிறார்கள். இடம் பற்றாக்குறையின் காரணமாக பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் பாதிக்கப்படுகிறது. வீட்டுமனை பட்டா கேட்டு பல வருடங்களாக விவசாய தொழிலாளர்கள் மனு கொடுத்து வருகிறார்கள். வருவாய்துறை நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதே போல் இந்த தாலுகாவிற்கு உட்பட்ட தளவாய்பட்டிணம், ஊத்துப்பாளையம், எரகாம்பட்டி, சித்தராவுத்தன்பாளையம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் ஏழை விவசாய தொழிலாளர்களுக்கு, தமிழக அரசு நிலசீர்திருத்த துறையின் மூலம் உபரி நிலம் வழங்கப்பட்டது. அதற்கான பட்டாவும் பயனாளிகளுக்கு அரசு வழங்கியது. பல ஆண்டுகள் ஆகியும் உபரி நிலங்களை அந்தந்த பயனாளிகளுக்கு அதிகாரிகள் அளந்து ஒப்படைக்கவில்லை. சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். எனவே அதிகாரிகள் உபரி நிலத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முற்றுகை நடத்தினோம். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதால் முற்றுகை போராட்டத்தை கைவிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.