வெளிமாநிலங்களில் இருந்து லாரி மூலம், கோவைக்கு 500 டன் பெரிய வெங்காயம் வந்தது - விலை குறைய வாய்ப்பு
வெளிமாநிலங்களில் இருந்து 500 டன் பெரிய வெங்காயம் லாரிகள் மூலம் நேற்று கோவைக்கு வந்தது. இதனால் வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கோவை,
இந்தியாவிலேயே பெரிய வெங்காயம் அதிகம் விளையும் மராட்டிய மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் அங்கிருந்து வெங்காயம் வருவதில் தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் வெங்காயத்தின் விலை கிடு கிடு வென உயர்ந்தது. ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.90 வரை விற்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது மராட்டிய மாநிலத்தில் மழை குறைந்துள்ளது. இதைத்தொடர்ந்து அங்கு அறுவடை செய்யப்பட்ட வெங்காயம் இந்தியா முழுவதும் லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகிறது. கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். மொத்த காய்கறி மார்க்கெட்டுக்கு மராட்டிய மாநிலத்தில் இருந்து தான் பெரிய வெங்காயம் பெருமளவில் வருவது வழக்கம். அதன்படி நேற்று மராட்டிய மாநிலம் புனே, அகமத் நகர், சகாரா உள்பட பல்வேறு இடங்களிலிருந்தும், கர்நாடக மாநிலம் ஹூப்ளி, சிக்மகளூர் ஆகிய இடங்களில் இருந்தும் பெரிய வெங்காயம் 20 டன் எடை கொண்ட 25 லாரிகளில் மொத்தம் 500 டன் வந்தது.
அதன் பின்னர் அந்த வெங்காயம் சிறிய வேன்கள் மூலம் கோவையில் உள்ள பல்வேறு மார்க்கெட்டுகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. இதனால் கோவையில் பெரிய வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து எம்.ஜி.ஆர். மொத்த காய்கறி மார்க்கெட் வியாபாரி ஒருவர் கூறியதாவது:-
கோவைக்கு பெரிய வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மொத்த விலையில் 10 ரூபாய் குறைந்து நேற்று ஒரு கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்டது. சில்லறை விலை ஒரு கிலோ ரூ.54 முதல் ரூ.58 வரை விற்கப்பட்டது. கோவைக்கு வரத்து அதிகரித்துள்ளதால் வெங்காயத்தின் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவைக்கு வரும் காய்கறிகள் பெரும்பாலும் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அதன்படி கோவையிலிருந்து கேரளாவுக்கு பெரிய வெங்காயம் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் அங்கும் விலை குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் கோவையில் பல இடங்களில் வெங்காயம் பதுக்கி வைத்திருப்பதாக புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து வெங்காயத்தை பதுக்கினால் அவை பறிமுதல் செய்யப்படும் என்று மாவட்ட கலெக்டர் ராஜாமணி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தற்போது நிலவி வரும் வெங்காய பற்றாக்குறை மற்றும் விலையேற்றம் காரணமாக வெங்காயம் இருப்பு வைப்பதற்கான அளவை தற்போது மத்திய அரசு நிர்ணயித்து திருத்தம் வெளியிட்டுள்ளது. அதை தமிழகம் முழுவதும் கடைபிடித்திடவும், அதில் விதி மீறல் இருந்தால் அதை கைப்பற்றவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி வருகிற 30-ந் தேதி வரை வெங்காய மொத்த வியாபாரிகள் 50 டன்களும், சில்லரை வியாபாரிகள் 10 டன்களும் வெங்காயம் இருப்பு வைத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் வெங்காயம் இருப்பு வைத்திருந்தால் அவை பறிமுதல் செய்யப்படும்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.