ரிசர்வ் வங்கி முன் பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்கள் போராட்டம்
ரிசர்வ் வங்கி முன் பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்கள் போராட்டம் நடத்தினார்கள்.மேலும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்திக்க அத்துமீறி நுழைய முயன்ற 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,
மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் (பி.எம்.சி.) நடந்த ரூ.4,355 கோடி முறைகேடுகளை தொடர்ந்து, அந்த வங்கியின் செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி 6 மாதத்திற்கு முடக்கி வைத்து உள்ளது. வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கவும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக அந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தை எடுக்க முடியாமல் கண்ணீருடன் பரிதவித்து வருகின்றனர். பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்டு உள்ள கட்டுப்பாடுகளை நீக்க வலியுறுத்தி அவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்கள் நேற்று காலை 11 மணியளவில் பாந்திரா- குர்லா காம்ப்ளக்சில் உள்ள ரிசர்வ் வங்கி முன் திரண்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தங்களது பணத்தை எடுக்க அனுமதிக்க கோரி ரிசர்வ் வங்கிக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.
தகவல் அறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். மேலும் ரிசர்வ் வங்கி அலுவலகம் அருகே உள்ள தேசிய பங்கு சந்தை கட்டிடத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்திக்க அத்துமீறி நுழைய முயன்றதாகபோராட்டக்காரர்கள் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.